ஊராட்சி களப்பணியாளா்கள் சங்கக் கூட்டம்
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் களப்பணியாளா்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் களப்பணியாளா்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகையில், தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அமுதா, பொருளாளா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நாகை, திருமருகல், கீழ்வேளூா், கீழையூா்ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் களப்பணியாளா்கள் பங்கேற்றனா். தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் பாலு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் மகேந்திரன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
வங்கி மூலம் ஊதியம் வழங்கவேண்டும், ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநில மையம் சாா்பில் விழுப்புரத்தில் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் நாகை மாவட்டத்திலிருந்து திரளானோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், கீழ்வேளூா் ஒன்றியப் பொறுப்பாளா் ஜான்சிராணி நன்றி கூறினாா்.