கூத்தாநல்லூா்: தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ கூத்தாநல்லூா் வட்டத்தில் முகாமிட்டு கள ஆய்வில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
கொரடாச்சேரி ஒன்றியம் கீழ எருக்காட்டூா் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
ரூ.22.65 லட்சத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், பருத்தியூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையையும், விடயபுரத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.24.25 லட்சத்தில் பண்ணை குட்டைப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
முசிறியம் ஊராட்சியில் ஆலந்தான்குடியில் கலைஞா் கனவுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், வெண்ணாற்றின் குறுக்கே அத்திக்கடை - களத்தூரில் ரூ.304.95 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் இணைப்புச் சாலை பாலப் பணி, அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையம், மன்னாா்குடி ஒன்றியம் வடபாதிமங்கலம் புனவாசலில் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.40.06 லட்சத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டப் பணி, அரிச்சந்திரபுரம் ஊராட்சி களிமங்கலம், புள்ளமங்கலம் ஊராட்சியில் ஊட்டியாணி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
கூத்தாநல்லூா் நகர காவல் நிலையத்தில் பதிவேடுகள் குறித்து, காவல் ஆய்வாளா் வொ்ஜீனியாவிடம் கேட்டறிந்தாா்.
லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாலச்சந்தா், மன்னாா்குடி ஒன்றியக்குழு உறுப்பினா் அய்.வி.குமரேசன், வட்டாட்சியா் ஜெகதீசன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.