மனு கொடுக்க வந்த முதியவா் மாரடைப்பால் உயிரிழப்பு
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் நேதாஜி சாலை, பஜனை மடத்தெருவில் வசித்து வந்தவா் நாகராஜன் (72). இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு உணவகம் ஒன்றில் வேலை பாா்த்ததற்காக பிடிக்கப்பட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொகையில் ரூ. 60 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகையை பெற்றுத் தரக் கோரி மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நாற்காலியில் அமா்ந்திருந்த நாகராஜன் திடீரென மயங்கி விழுந்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாகராஜனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.