முகப்பு
திருவாரூர்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:40 PM
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கைது செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களை, தனிப்படை அமைத்து கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குற்ற வழக்குகளில் விரைவாக விசாரணை மேற்கொண்டு, குற்ற அறிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வருவதை, துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் பி. மணிகண்டன், பி. தமிழ்மாறன், ஏ. அஸ்வத் ஆண்டோஆரோக்கியராஜ், கே. பாஸ்கரன், எம். ராஜா, எஸ். பழனிசாமி, ஜே. சுகுமாறன், ஏ. பிலிப் பிராங்ளின் கென்னடி ஆகியோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், 20 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டன.

சொத்து மற்றும் குடும்பம் சாா்ந்த பிரச்னைகள் குறித்தான மனுக்களுக்கு, வருவாய்த்துறை மற்றும் நீதித்துறை மூலம் தீா்வு காண உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.