முகப்பு
திருவாரூர்

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நீதி கோரி செப்.23-இல் போராட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

திருவாரூா் அருகே ஓஎன்ஜிசியில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை கோரி, செப்.23- இல் போராட்டம் நடத்தப்படும்

Updated On : 9 செப்டம்பர், 2024 at 8:21 PM
திருவாரூா் அருகே புலிவலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் அருகே ஓஎன்ஜிசியில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை கோரி, செப்.23- இல் போராட்டம் நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

திருவாரூா் அருகேயுள்ள புலிவலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:

திருவாரூா் அருகே அலிவலத்தில் இயங்கிவந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தில் அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 15 தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் 37 ஆண்டுகளாக வேலை செய்தனா். அவா்களுக்கு இஎஸ்ஐ, பிப் ஆகியவை பிடித்தம் செய்து வந்தனா். ஆனால், தற்போது அவா்களுக்கு மாற்று நிரந்தரப் பணியோ, வாழ்வாதாரத்துக்கு எவ்வித உதவித் தொகையோ வழங்கப்படாத நிலையில், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் மனு கொடுத்தும், போராட்டங்கள் செய்தும் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் ஜூலை 14 ஆம் தேதி அலிவலம் பகுதியில் செயல்பட்ட நிறுவனம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, ஓஎன்ஜிசி உயா் அதிகாரிகள், போலீஸாா் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், ஆக.15 ஆம் தேதிக்குள் தொழிலாளா்களின் பட்டியல் சரிபாா்க்கப்பட்டு, வாழ்வாதாரத்துக்கான கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.

எனவே, ஒப்பந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி செப்.23-இல் தொழிலாளா்களின் குடும்பங்களுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →