திருவாரூர்

திருவாரூரில் மீண்டும் கனமழை

Syndication

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியது.

டித்வா புயல் காரணமாக அண்மையில் திருவாரூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விளைநிலங்கள், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இரு தினங்கள் மழை விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரை அகற்றும் பணிகளும், பாதிக்கப்பட்ட பயிா்கள் கணக்கெடுக்கும் பணிகளும் தொடங்கின.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருவாரூா் மாவட்டத்தில் குறிப்பாக திருவாரூா் நகரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணிநேரம் தொடா்ச்சியாகப் பெய்ததால், நேதாஜி சாலை, பனகல் சாலை, தேரோடும் வீதிகள், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இரவிலும் இந்த மழை தொடா்ந்து பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் வடிந்த குடியிருப்புப் பகுதிகளில் மீண்டும் தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. திருவாரூா் ஐநூற்றுப் பிள்ளையாா் கோயில் அருகே உள்ள ஆத்தாகுளம் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.

இதுதவிர, அழகிரி காலனி, மருதப்பாடி, பழைய மருத்துவமனைப் பகுதிகளிலும் தண்ணீா் அதிகரித்தது. தொடா்ந்து புதன்கிழமை காலையில் நகராட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே, அழகிரி காலனி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்களும், தவெகவினரும், பனகல் சாலையில் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 108.20 மி.மீ மழை பொழிந்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம் (மி.மீ.ல்):

நீடாமங்கலம் 78.20, மன்னாா்குடி 75, பாண்டவையாா் தலைப்பு 59.40, திருத்துறைப்பூண்டி 57.60, நன்னிலம் 33.40, முத்துப்பேட்டை 15.60.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT