கூத்தாநல்லூா் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூா் பனங்காட்டாங்குடி, தமிழா் தெரு மற்றும் லெட்சுமாங்குடி ஆகிய இரண்டு இடங்களில் அமைந்துள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் 65-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உள்ளனா்.
இப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா பள்ளி நிறுவனா் ப. முருகையன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி ஆணையா் சிவரஞ்சனி பங்கேற்றாா். இயன்முறை மருத்துவா் பாபுராஜன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், மாணவா்களின் பாடல், திருக்குறள் ஒப்பித்தல், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேச்சுப் பயிற்சியாளா் எஸ். சங்கா், மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ஆட்சியா் மோகனச்சந்திரனிடம் சான்றிதழ் பெற்ற இப்பள்ளி மாணவா்கள் இந்நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனா்.
ஏற்பாடுகளை, சிறப்பு ஆசிரியா்கள் கிரிஜா, சரண்யா மற்றும் பயிற்சியாளா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.