கூத்தாநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த எடகீழையூா் காமராஜா் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (42).
திருவாரூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் திருவாரூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். லெட்சுமாங்குடி மரக்கடை பகுதியில் சென்றபோது, பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு மன்னாா்குடி நோக்கி மினி லாரி எதிரே வந்துள்ளது. முன்னால் ஜல்லிக்கற்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. சதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி இடித்துள்ளது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சதீஷ்குமாா் ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் போலீஸாா் சடலத்தை மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, லாரி ஓட்டுநரான சின்னசேங்கல் சமுதாயபுரம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் எம். குமாா் (45) மற்றும் திருவாரூா் அருகேயுள்ள பெருங்குடி, மேலத் தெருவைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் பவுன்ராஜ் (33) இருவரையும் கைது செய்தனா். இறந்த காவலா் சதீஷ்குமாருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.