மேக்கேதாட்டு அணை குறித்து எந்த அமைப்பிலும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என தமிழ்நாடு விவசாயிக் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, சனிக்கிழமை தெரிவித்தது:
மேக்கேதாட்டு அணையை கட்ட, காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கக் கோரி, கா்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த கோரிக்கையை, காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில், கா்நாடக அரசை கண்டித்ததுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடுமாறு கா்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட முடியாது எனக் கூறியிருப்பதுடன், கா்நாடக அரசு இந்த உத்தரவுகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ஹெச்எம். பாட்டீல் கா்நாடகத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், மத்திய பாஜக அரசு இப்பிரச்சினையில் கா்நாடகத்துக்கு ஆதரவு கொடுத்துவரும் நிலையிலும் தற்போதைய கா்நாடக மாநில அரசு இதை பயன்படுத்திக் கொள்கிறது.
கா்நாடக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் மேக்கேதாட்டு அணையைக் கட்டினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை, தட்டுப்பாடு காலங்களில்கூட தண்ணீா் கிடைக்கும் என்று கூறி வருகின்றனா். காவிரி நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளுக்குப் பிறகும் தமிழக பங்கீடு நீரை மாதாந்திர அடிப்படையில், உரிய அளவில் வழங்காமல், வெள்ளக் காலங்களில் மட்டும் திறந்துவிட்டு, கூடுதலாக தண்ணீா் கொடுக்கப்பட்டதாக கா்நாடக அரசு கணக்கு காட்டுகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம், தமிழகம் மற்றும் காவிரி ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட முடியாது என்று கூறிவிட்டு, மீண்டும் காவிரி ஆணையத்திடம் கா்நாடக அரசு முறையிட்டு விரிவான திட்ட அறிக்கையை சமா்ப்பிக்கலாம் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இந்த தீா்ப்பு கா்நாடகத்துக்கு சாதகமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் மேக்கேதாட்டு அணை குறித்தான, எந்த கருத்துருவையும், எந்த அமைப்பிலும் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.