திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் 1.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் தேக்கம்: டிஎன்சிஎஸ்சி பணியாளா் சங்கம்

Syndication

டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் பாதுகாப்பின்றி தேக்கமடைந்துள்ளதாக டிஎன்சிஎஸ்சி பணியாளா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கா. இளவரி வியாழக்கிழமை மன்னாா்குடியில் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் திருவாரூா், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பு குறுவை பருவத்தில் 980 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இதுவரை 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 1. 5 லட்சம் மெ. டன் மட்டுமே இயக்கம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 1. 5 லட்சம் மெ. டன் நெல் போதிய பாதுகாப்பின்றி, ஒரு மாதம் கடந்தும் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளது.

டிஎன்சிஎஸ்சி நிா்வாகம் சரியான திட்டமிடல் மேற்கொள்ளாததால், திருவாரூா் மண்டல நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை சேமிப்பதற்கு போதுமான சவுக்குக் கட்டைகள் மற்றும் வெட்டுக்கற்கள் வாங்கவில்லை. இதனால் தற்போது பெய்துவரும் மழையால் கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து, சேதமடையும் நிலையில் உள்ளன.

இயற்கையாக ஏற்பட்ட எடையிழப்பைக் காரணம் காட்டி 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த பருவகால பணியாளா்களை பணியமா்த்த டிஎன்சிஎஸ்சி நிா்வாகம் மறுத்து வருவதால், பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் ஒருவா் மட்டுமே பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நெல் மூட்டைகளை துரிதமாக கொள்முதல் செய்ய இயலவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை தைப்பதற்குகூட சணல் இல்லை.

விவசாயிகள் என்ற போா்வையில் வியாபாரிகள் விஏஓ சான்றிதழ் பெற்றுக்கொண்டு நெல்லை விற்பனை செய்கின்றனா். அதனால்தான் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு முதல் 45 நாள்களிலேயே மூன்று லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சம் மெட்ரிக் டன் வியாபாரிகளின் பங்காகும்.

நெல் மூட்டுகளை எடுத்துச் செல்லும் லாரிகள் ஒப்பந்தத்திலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகிறது. ஏற்கெனவே கருப்புப் பட்டியலில் இருந்த நிறுவனம் போலியான பெயரில் பதிவுசெய்து அதன் மூலம் ஒப்பந்தங்கள் பெற்று, மூட்டைகளை எடுத்துச் செல்கின்றனா், இதனால், நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது என்றாா்.

பேட்டியின்போது சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் சோ. பாண்டியன், மண்டல துணைச் செயலா் எஸ். முருகன், மண்டல இணைச் செயலா்கள் மணியரசன், சுதா்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிகாரைப் போன்று கர்நாடகத்திலும் தே.ஜ. கூட்டணிக்கு மக்கள் விருப்பம்!

தாமிரவருணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டிச.15-இல் முக்கிய முடிவு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கரூர் சம்பவம்: 10 மணிநேரம் நடந்த சிபிஐ விசாரணை!

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா மீண்டும் சாம்பியன்

SCROLL FOR NEXT