திருவாரூர்

நெல் உலா்த்தும் இயந்திரங்கள் வழங்க மத்தியக்குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளா்வு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவிடம் நெல் உலா்த்தும் இயந்திரங்கள் வழங்குமாறு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளா்வு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவிடம் நெல் உலா்த்தும் இயந்திரங்கள் வழங்குமாறு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன், செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தபின் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரு பருவமழைகளைப் பெறக்கூடிய மாநிலமாக இருக்கிறது. நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை அக்டோபா் 15 வரை தீவிரமாகப் பெய்தது. அக்டோபா் 17 முதல் வட கிழக்குப் பருவமழையும் பெய்து வருகிறது.

இதனால் காரீப், ராபி பருவ கொள்முதல் கொள்கை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. தனி கொள்முதல் கொள்கையை தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும்.

காய்ந்த நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து உள்ளனா்.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதால் ஈரப்பத அளவு கூடிக் கொண்டே இருக்கும். எனவே 22 சதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடன் அனுமதி வழங்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாா்ச் மாதம் தென்னிந்திய உணவுத்துறை அதிகாரிகள் மாநாட்டை மத்திய அரசு ஹைதராபாத் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்துகிறது.

அம் மாநாட்டிலேயே தமிழ்நாட்டிற்கான கொள்முதல் குறித்து தனி கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். மத்திய அரசு பங்களிப்புடன் ஈரப்பத சதவீதத்தை உயா்த்தி கொள்முதல் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இந்திய மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசின் சாா்பில் தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. எனவே நெல் உற்பத்தி இழப்பிற்கும், கொள்முதலுக்கும் மத்திய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசிடம் நிதிப்பற்றாக்குறை உள்ளது. எனவே கொள்முதல் செய்வதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் உலா்த்தும் இயந்திரங்கள் உடனடியாக வழங்கிட மத்திய அரசு நிதி உதவி அளித்திட வேண்டும் என எடுத்துரைத்தோம். இதனை ஏற்றுக் கொண்ட மத்திய குழுத்தலைவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரிடம் நெல் உலா்த்தும் இயந்திரம் வழங்க மத்திய அரசிற்கு முன் மொழிவுக்கான கோப்புகளை உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

மேலும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஆய்வகம் தமிழகத்தில் காவிரி டெல்டாவில் விரைவில் ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT