திருவாரூரிலிருந்து, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா உரம், புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்துக்கு 1,321 மெட்ரிக் டன் யூரியா மத்திய கூட்டுறவு நிறுவனம் கிரிப்கோ கம்பெனி மூலம் வந்துள்ளது. அனைத்து கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு அனுப்பி விவசாயிகளின் தேவையை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 59,949 ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 77,581 ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி சாகுபடிக்குத் தேவையான உரங்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாகுபடிக்குத் தேவையான 1,321 மெட்ரிக் டன் யூரியா உரத்தை, மத்திய கூட்டுறவு நிறுவனம் கிரிப்கோ வழங்கியுள்ளது. இந்த உரம், ரயில் மூலம் திருவாரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இந்த உரங்கள், தஞ்சாவூா் கூட்டுறவு இணையம் மூலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகள் வழியாக, புதன்கிழமை அனுப்பப்பட்டன.
உரங்கள் செல்லும் பணியை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) செந்தில், கிரிப்கோ நிறுவன மாவட்ட மேலாளா் கபிலன் ஆகியோா் பாா்வையிட்டனா் .