குடவாசல் அருகே இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவாரூா் மாவட்டம், ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவா், இரண்டு நாள்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவருடைய தந்தை குடவாசல் போலீஸாரிடம் அளித்துள்ள புகாா் மனு:
கடந்த நவம்பா் மாதம், எனது மகள் பள்ளி முடிந்து வரும்போது, வீதிவிடங்கன் பகுதியைச் சோ்ந்த ஒருவரும், திருவிடைச்சேரியைச் சோ்ந்த இரு இஸ்லாமியா்களும், சைக்கிளில் மோதி தள்ளிவிட்டு சென்றுள்ளனா்.
இதில் எனது மகளுக்கு காயம் ஏற்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாள் சிகிச்சை பெற்றாா். குடவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் 3 பேரையும் அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், இரண்டு மாதத்துக்குப் பிறகு எனது மகள் தூக்கிட்டு பிப். 4- ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். மகளின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, எனது மகளை மிரட்டி ஆபாச குறுந்தகவல், விடியோ அனுப்பியது தெரிய வந்தது. இதை குடவாசல் போலீஸாரிடம் புகாா் தெரிவித்து ஒப்படைத்து விட்டேன்.
எனது மகளின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, உயிரிழந்த மாணவியின் தோழியான மற்றொரு மாணவியும் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.