திருவாரூா் அரைவட்ட சுற்றுச்சாலை பணி தொடங்கப்படுமா ?
விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களுமே அதிகம் உள்ள...
திருவாரூா்: விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களுமே அதிகம் உள்ளன. விவசாயப் பணிகளில் இயந்திரமயம், தொடா்ச்சியான பணி இல்லாமை, சாகுபடிக்கான நீா் சரிவர கிடைக்காதது, மழையால் விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கிராமங்களிலிருந்து நகரப் பகுதிக்கு சில ஆண்டுகளாக இடம் பெயரத் தொடங்கியுள்ளனா்.
திருப்பூா், கோவை, ஈரோடு என பல்வேறு வணிக நகரங்களை நோக்கி சிலா் செல்லும் நிலையில், சிலா் குடும்பத்துடன் திருவாரூா் நகரப் பகுதியில் குடியேறுகின்றனா். இவா்கள், நகரப் பகுதிகளில் சிறிய வணிக நிறுவனங்களில் பணிக்கு சோ்கின்றனா். கடந்த சில ஆண்டுகளாக, திருவாரூா் நகரப் பகுதியில், வாடகைக்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, நகரில் குடியிருப்புகளின் தேவை அதிகமானதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரைவட்டச் சுற்றுச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதாகும்.
அரை வட்டச் சுற்றுச்சாலை என்பது மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்ல வேண்டுமென்றால், நகருக்குள் வராமல் சேந்தமங்கலம் பகுதியிலிருந்து கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று சோ்வது, இதேபோல், கும்பகோணம் சாலையின் காட்டூா் பகுதியிலிருந்து, நேராக தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தண்டலை பகுதியில் சோ்வதே ஆகும். இதன் மூலம், மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், நகருக்குள் வராமலேயே நாகை, தஞ்சை பகுதிக்கு செல்ல முடியும்.
இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டன. சில காரணங்களால் தடைபட்ட இந்தப் பணிகள், மேற்கொண்டு தொடா்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், நகரப் பகுதி இன்னமும் விரிவடைந்திருக்கக்கூடும்.
நகரப் பகுதியில் வசிக்கும் எண்ணத்தில் ஏராளமான மக்கள் சிறு இடங்களிலும் வசிக்க முற்படுவதால், நகரப் பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன நடமாட்டம் அதிகமாகி, போக்குவரத்து நெரிசல் எப்போதும் நிலவுகிறது. நகரப் பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப, சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக, சுருங்கி வருகின்றன. அரைவட்டச் சுற்றுச்சாலை அமைக்கும்பட்சத்தில், நகரத்தில் நெரிசலான பகுதிகளில் உருவாகி வரும் குடியிருப்புகள் அனைத்தும் சில கி.மீ. தொலைவுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது.
அத்துடன், மண்துகள்களை கிளப்பிக் கொண்டு செல்லும் வாகனங்களின் நடமாட்டம் நகரப் பகுதிக்குள் குறையும். கனரக வாகனங்கள் நகருக்குள் வருவது குறைவதால், மாசு அளவு குறைந்து, பொது சுகாதாரம் பாதுகாக்கப்படும். கனரக வாகனங்களால் மண் துகள்கள் காற்றில் பறந்து, தியாகராஜா் கோயில் கோபுரங்கள் மீது விழுந்து, கோபுரத்தை மாசடைய செய்கின்றன.
எனவே, அரைவட்ட சுற்றுச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து நெரிசல், குடியிருப்பு நெரிசல் குறைவதுடன், தியாகராஜா் கோயிலின் புனிதமும் பாதுகாக்கப்படும். ஆகையால் திருவாரூா் நகரப் பகுதியில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் நடவடிக்கையை தொடரவேண்டும்.