முகப்பு
புதுதில்லி

காமன்வெல்த் போட்டிகள் ஓராண்டு நிறைவடைந்தும்.. நிறைவடையாத சர்ச்சைகள்...

தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முடிவடைந்து ஒராண்டு ஆகிவிட்டது. இந்தப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள் இன்று தில்லியின் புராதனச் சின்னங்களாக மாறி வருகின்றன. விளையாட்டு அரங்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:42 PM
பகிர்:

தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முடிவடைந்து ஒராண்டு ஆகிவிட்டது. இந்தப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள் இன்று தில்லியின் புராதனச் சின்னங்களாக மாறி வருகின்றன.

விளையாட்டு அரங்குகள் பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கோடிக் கணக்கில் செலவிடப்பட்டுள்ள மக்கள் பணம் வீணாகி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி இதே நாளில் தில்லி கோலாகலம் பூண்டிருந்தது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாண வேடிக்கையும், வண்ண விளக்குகளின் ஒளியும் நாட்டு மக்கள் மனத்தில் இன்னும் நீங்கா இடம் பெற்றுள்ளன. ஆனால், விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்னர், பூட்டப்பட்ட அரங்குகளின் பூட்டுகள் இப்போது துருப்பிடித்து விட்டன.

விலை உயர்ந்த கிடங்கு

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா நடைபெற்ற நேரு ஸ்டேடியம் ரூ. 961 கோடியில் சீரமைப்பு செய்யப்பட்டது. தொடக்க நாளில் விண்ணில் மிதந்த ராட்சத பலூனின் மதிப்பு ரூ. 70 கோடி. அந்த பலூன் எதற்கும் பயன்படுத்தப்படாமல், இப்போது கிடங்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் போட்டி தொடக்க நாளன்றும், நிறைவு நாளன்றும் உபயோகிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்கள் கிடங்குகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

இது மட்டும் இன்றி தடகள வீரர்கள் பயன்படுத்தும் ஸிந்தடிக் ஓடுகளத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் தடகள விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14-ல் மூடப்பட்ட சில விளையாட்டு அரங்குகளின் கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. சில அரங்குகள் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் அறைகள் இல்லை. கட்டணமும் அதிகம். இதன் காரணமாக அங்கே போட்டிகள் குறைவாகவே நடைபெறுகின்றன.

""மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்டேடியங்களில் போட்டிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் ஸ்டேடியங்கள் பயனற்றதாகிவிடும்'' என்று இந்திய காமன்வெல்த் போட்டியின் தலைவர் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.

தியாகராஜ் அரங்கம்

காமன்வெல்த் போட்டிக்காக தில்லியில் 12 அரங்குகள் கட்டப்பட்டன. இதில் மக்கள் பயன்பாட்டில் முதலிடம் வகிப்பது தியாகராஜ் அரங்கம். ஸ்ரீபோர்ட் அரங்கத்திலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

காமன்வெல்த் வீடுகள்

விளையாட்டு அரங்குகள் மட்டும் இன்றி வீடுகளும் பூட்டப்பட்டுள்ளன. காமன்வெல்த் போட்டி வீரர்கள் தங்குவதற்காக ரூ.1,600 கோடியில் 1,168 வீடுகள் கட்டப்பட்டன. தரக் குறைபாடு, முறைகேடு, பணிகள் நிறைவடைவில்லை என்று போட்டிகள் தொடங்கிய அன்று தொடங்கிய சர்ச்சைகள் ஓராண்டு ஆகியும் இன்னும் முடிவடையவில்லை. வீட்டை 10 நாள்கள் பூட்டிவிட்டு சென்றாலே சுத்தப்படுத்துவது கடினம்.

ஆனால், ஓராண்டு காலமாக பூட்டப்பட்டிருக்கும் காமன்வெல்த் வீடுகளின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது. ஒவ்வொரு வீடும் ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால், பணிகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தால் வாங்கியவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இதில் தில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு (டி.டி.ஏ.) 723 வீடுகள் உள்ளன. இவையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. சர்வதேச கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், வீடுகளைப் பராமரிக்கத் தவறினால் மக்களின் பணம்தான் வீணாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.