முகப்பு
புதுதில்லி

இந்தியாவை வல்லரசாகத் தரம் உயர்த்தும் ராணுவக் கண்காட்சி

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடுகளையே உலக நாடுகள் வல்லரசு நாடுகளாக அங்கீகரிக்கின்றன. அந்தத் தன்னிறைவுப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பதை தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நட

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:36 PM
பகிர்:

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடுகளையே உலக நாடுகள் வல்லரசு நாடுகளாக அங்கீகரிக்கின்றன. அந்தத் தன்னிறைவுப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பதை தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நடத்தியக் கண்காட்சி உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

கண்காட்சியில் உலக நாடுகளின் பாதுகாப்புத் தளவாடங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் இந்தியத் தயாரிப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் 30 நாடுகளின் நவீன வகை பாதுகாப்புக் கருவிகள், சுமார் 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பாதுகாப்பு நிறுனங்களின் நவீன ரகத் துப்பாக்கிகள், போர்க் களத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள், ரேடார் கருவிகள், செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவிகள் போன்றவை பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன.

அமெரிக்கா, ரஷியா, பிரட்டன், இஸ்ரேஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் தளவாடங்கள் தங்களுக்கே உரிய பாணியில் சர்வதேச பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இந்திய பாதுகாப்புத் துறையின் சாதனைக் கருவிகள்: இந்திய பாதுகாப்புப் படைகளுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், கருவிகளைத் தயாரிக்கும் பாரத் மின்னணு நிறுவனம் (பி.இ.எல்), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மற்றும் டாடா நிறுவனம், அசோக் லேலண்ட் ஆகியவற்றின் தயாரிப்புகளை உலகப் பார்வையாளர்களும் பன்னாட்டு பாதுகாப்பு வல்லுநர்களும் ஆர்வத்துடன் கண்டு விவரங்களைக் கேட்டனர்.

இந்தியாவின் "பிரமோஸ்' ஏவுகணை, குறுகிய தூரத்துக்குச் செல்லும் "பிரஹார்' ஏவுகணை, ஆளில்லா விமானம், அர்ஜுன் டாங்கிகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள் ரேடார்கள், இந்திய விமானப்படை விமானங்களின் "ஸ்கை வார் சிமுலேஷன்' எனப்படும் வான்வழிப் போர் மாதிரி செயல் அனுபவக் காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

"பிரஹார்' ஏவுகணை சுமார் 150 கிலோ மீட்டருக்கு சென்று தாக்கும் திறன் வாய்ந்தது. அதேபோல், "ருஸ்தம்' எனப்படும் ஆள் இல்லா விமானம் 1,100 -1,800 கிலோ வரை எடை கொண்டது.

35 ஆயிரம் அடிக்கு மேல் பறந்தபடி, தரையில் நடக்கும் நிகழ்வுகளைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமை கொண்டது.

உலக அளவில் வான்வழி, விண்வெளி கண்காணிப்பில் தன்னிகரற்று விளங்கும் அமெரிக்க, சீனப் படையினருக்கு இந்தியாவின் இந்தத் தயாரிப்பு கலக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு பாதுகாப்புக்காக புதிய ரகத் தொழில்நுட்பக் கருவிகளை டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் வடிவமைப்பான "குண்டு துளைக்காத சிறிய வாகனம்' அனைவரையும் கவர்ந்தது.

இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகளுக்கு பி.இ.எல். நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கைக் கடிகாரத்தைப் போல் கையில் கட்டிக் கொள்ளும் கணினி, ரூ. 3,500 மதிப்பிலான "டேப்லட்' கணினி போன்றவை அதன் சாதனைத் தயாரிப்புகளாகக் கருதப்படுகின்றன.

துப்பாக்கிகள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் இஸ்ரேல் நாட்டுக் கருவிகள் தொழில்நுட்ப ரீதியாகவும் உபயோகிக்க எளிமையாகவும் இருப்பதாக கண்காட்சியைக் காண வந்த பன்னாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

ரஷியாவின் ராணுவ ரோபாட்டுகள், சர்வதேச, இந்தியப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. அவற்றுக்கு சவால் விடும் வகையில் இந்தியத் தயாரிப்புகளும் அமைந்திருந்தன.

இந்திய ராணுவம் பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகள் பழைமை வாய்ந்தவை என்று அதன் தலைமைத் தளபதி வி.கே. சிங் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதனால், தில்லியில் நடைபெற்ற கண்காட்சியை இம்முறை சர்வதேசப் பார்வையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காண வந்தனர்.

"இந்தியத் துணைக் கண்டம்' சப்தமில்லாமல் வல்லரசு நாடாக மாறி வருவதை உலக நாடுகள் உணர்ந்து கொள்ளும் என கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்கள் பெருமிதத்துடன் கூறிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.