வாக்களிக்க வாக்குறுதி கேட்கும் "சப்தர்ஜங் என்கிளேவ்' மக்கள்
தேர்தல் என்றாலே வாக்குறுதிகளையும், இலவசங்களையும் வேட்பாளர்கள் அள்ளிவீசுவது வழக்கம். மக்கள் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, வேட்பாளர்கள்தான் தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், தெற்கு தில்லி மாநகராட்சிய
தேர்தல் என்றாலே வாக்குறுதிகளையும், இலவசங்களையும் வேட்பாளர்கள் அள்ளிவீசுவது வழக்கம். மக்கள் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, வேட்பாளர்கள்தான் தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள்.
ஆனால், தெற்கு தில்லி மாநகராட்சியின் 163வது வார்டான சப்தர்ஜங் என்களேவ் பகுதியில் அப்படியல்ல.
மக்கள் அறிக்கை சப்தர்ஜங் குடியிருப்பு நலச் சங்கத்தினர் வித்தியாசம் ஆனவர்கள். தங்கள் பகுதி பிரச்னைகளைப் பட்டியலிட்டு அவர்கள் "மக்கள் அறிக்கை' தயாரித்துள்ளனர்.
தாங்கள் வெற்றி பெற்றால் "மக்கள் அறிக்கை'யில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அந்தப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறுகிறார்கள்.
40 கோரிக்கைகள்
சப்தர்ஜங் என்கிளேவ் குடியிருப்பு சங்கத்தினர் "மக்கள் அறிக்கை'யில் சுமார் 40 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
"கமல் சினிமா பகுதி சுகாதாரமான பகுதியாக மாற்றப்படும். கழிவுநீர்க் கால்வாய்கள் மூடப்படும். அர்ஜுன் நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்கப்படும். அடுக்குமாடி பார்க்கிங் கட்டப்படும். பழதடைந்த குடிநீர் மீட்டர்கள் மாற்றப்படும். 24 மணி நேர புகார் மையம் அமைக்கப்படும்' என்று வேட்பாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்பவை அவற்றில் ஒரு சில கோரிக்கைகளாகும்.
பாஜக வேட்பாளர்
கையெழுத்திடவில்லை
"மக்கள் அறிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்' என்று குடியிருப்போர் நலச் சங்கத்திடம் வாக்குறுதி அளிக்க புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அமன் அரோரா, பாஜகவின் வேட்பாளர் சைலந்தர் சிங் மான்ட்டு, தேசிய பாந்தர்ஸ் கட்சியின் வேட்பாளர் ராஜீவ் கோஸ்லா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பாஜக வேட்பாளரைத் தவிர மற்ற இரு வேட்பாளர்கள் மக்கள் அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
"உள்ளாட்சித் துறை நிர்வாகத்தில் வராத பிரச்னைகளுக்குத் தீர்வு காண மக்கள் அறிக்கை வலியுறுத்துவதால் அதில் கையெழுத்திடவில்லை' என்று பாஜக வேட்பாளர் சைலந்தர் சிங் தெரிவித்தார்.
"தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க நீங்கள் யார்? என்று எங்களை அரசியல் கட்சிகள் கேட்கின்றனர். இருந்தாலும் மக்கள் அறிக்கையை தொடர்ந்து வேட்பாளர்களிடம் கொண்டு செல்வோம்' என்று சப்தர்ஜங் என்கிளேவ் குடியிருப்பு சங்க நிர்வாகி ஷிவ் லால் வத்வானி தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள்
தில்லியின் ஆடம்பரமான பகுதிகளில் சப்தர்ஜங் என்களேவும் ஒன்று. இந்த வார்டில் கிரீன் பார்க், யூசுப் சராய், அர்ஜுன் நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகள் அடங்கும்.
அர்ஜுன் நகர், யூசுப் சராய் போன்ற பகுதிகளில் மிகுந்த நெருக்கடியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன. பல இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதுதான் அதற்குக் காரணம்.
"நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் சாலைகள், தண்ணீர், கழிவு நீர் வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை' என்று அப்பகுதியில் வசிக்கும் பல்வீர் சிங் கூறினார்.
இருபது வருடமாக அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், கழிவு நீர் அகற்றும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணவில்லை என்றும் பல்வீர் சிங் கூறினார்.
"இந்த பகுதியில் "டீர் பார்க்'கில் மாலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க போலீஸôர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ராகேஷ் சர்மா வலியுறுத்தினார்.
கிரீன் பார்க் மார்க்கெட்
சாதாரணக் குடியிருப்பு பகுதியாக இருந்த கிரீன் பார்க் தற்போது பிரபலமான மார்க்கெட் பகுதியாக மாறியுள்ளது. இந்த மார்க்கெட்டுக்குத் தனியாக பார்க்கிங் வசதி கிடையாது.
"மாலை நேரங்களில் வாகனங்கள் சாலைகளில் நுழைய முடியாத அளவுக்கு நேரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை நிறுத்த குறைந்தது 20 நிமிடங்கள் ஆவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்' என்று அடையாறு ஆனந்தபவன் ஹோட்டலின் மேலாளர் என்.ஜே. வெங்கடகிருஷ்ணன் கூறினார்.
மற்ற பகுதி வாக்காளர்களுக்கு...
சப்தர்ஜங் என்கிளேவ் வார்டில் மட்டுமல்ல. நீண்ட காலமாக மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ள பகுதிகள் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில், "மக்கள் அறிக்கை'யில் வேட்பாளர்களின் கையெழுத்தைப் பெறுவது என்ற சப்தர்ஜங் என்களேவ் வாக்காளர்களின் புதிய யுக்தியை மற்ற பகுதி வாக்காளர்களும் பின்பற்றினால் ஜனநாயகம் வலுப்பெறும்.