முகப்பு
புதுதில்லி

"சுற்றுச்சூழல் பாதுகாப்பு' இலச்சினைகளில் இலட்சியங்கள்

தேசத்தின் தலைமகளான குடியரசுத் தலைவரின் மாளிகைக்குள் நுழைந்தால் திரும்பிய பக்கம் எல்லாம் வண்ண ஓவியங்கள். பிஞ்சுக் கைகள் தீட்டிய வண்ணத் தூரிகைகளின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் விளக்கம் அளிக்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

தேசத்தின் தலைமகளான குடியரசுத் தலைவரின் மாளிகைக்குள் நுழைந்தால் திரும்பிய பக்கம் எல்லாம் வண்ண ஓவியங்கள். பிஞ்சுக் கைகள் தீட்டிய வண்ணத் தூரிகைகளின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் விளக்கம் அளிக்கின்றன.

 இந்தக் காட்சிகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலச்சினை தொடர்பாக நடைபெற்று வரும் கண்காட்சிக்கு செல்வோருக்கு அரங்கேறும் காட்சிகள்.

 இலச்சினை தேர்வு:

 2008-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக "ரோஷ்னி' எனப்படும் பசுமைத் திட்டத்தைக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார். நீர் சேகரிப்பு, மாற்று எரிசக்தியின் முக்கியத்துவம், கழிவு மேலாண்மை, நகர்ப்புற மக்களிடம் பசுமைக்கு உண்டான பொறுப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

 தற்போது ரோஷ்னி திட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த திட்டத்துக்குப் பொருத்தமான இலச்சினையைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள் பங்களிப்புடன் இலச்சினைகள் தேர்வு நடைபெற்றது.

 நாடு முழுவதும் இருந்து 10,480 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3 கோடி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

 இறுதியாக 405 பள்ளிகளைச் சேர்ந்த 3,276 மாணவர்களின் இலச்சினைகள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை பார்வைக்காக வைக்கப்பட்டன. அவற்றைக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பார்வையிட்டு ஓர் இலச்சினையைத் தேர்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

 ஜம்மு காஷ்மீர் மாணவர்

 முதலிடம்:

 ரோஷ்னி திட்டத்துக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 9-வது வகுப்பு மாணவன் ராபின் சிங் எளிமையாக ஒற்றைக் கோட்டில் வீடு, மரம், சூரியன் ஆகியவற்றைத் தீட்டிய இலச்சினை தேர்வு செய்யப்பட்டது. ராபின் சிங்கின் தந்தை வீரேந்தர் சிங் எல்லைப் பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தக் கூட்டத்தில் ராபின் சிங் கலந்து கொள்ளவில்லை.

 தில்லி மாணவருக்கு

 ஊக்கப் பரிசு:

 தில்லி, பாலம் விமானப் படை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர் விபு பிரகாஷ் வரைந்த படத்துக்கு ஊக்கப் பரிசுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 கூட்டத்தில் அமர்ந்திருந்த விபு பிரகாஷ் அவரது தந்தை ஆனந்த் பிரகாஷ் ஆகியோரை தம் அருகே வரும்படி பிரதிபா பாட்டீல் அழைத்தார்.

 மாணவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் வீறு நடைபோட்டு வந்த விபு பிரகாஷ் குடியரசுத் தலைவரிடம் வாழ்த்து பெற்று, ""எனது நீண்ட நாள் கனவு இன்று நனவானது'' என்று மகிழ்ச்சி தழும்ப கூறினார்.

 ""இந்தப் போட்டி குறித்த தகவலை நான் பயிலும் பள்ளிக்கே எனது தந்தைதான் தெரிவித்தார். அதன் பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இணையதளம், புத்தகங்களில் தகவல்களைச் சேகரித்து இந்த இலச்சினையை உருவாக்கினேன். இனி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எனது நண்பர்கள் எல்லோரிடமும் கூறுவேன்'' என்று விபு பிரகாஷ் கூறினார். இந்த இலச்சினையை உருவாக்க நான்கு நாள்கள் ஆயிற்று என்கிறார் விபு.

 உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி, ராபின் சிங்குக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசும், விபு பிரகாஷுக்குச் சான்றிதழும் வழங்கப்படும்.

 இந்தியாவைப் பசுமையாக

 மாற்றுங்கள்:

 பரிசு அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், அரங்கில் குவிந்திருந்த மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்குக் பிரதிபா பாட்டீல் உற்சாகமாக பதிலளித்தார்.

 ""இந்தியாவில் பசுமையான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

 இதன் மூலம் மனிதர்களும் இயற்கையும் பாதுகாப்பாக வாழலாம். இந்தியாவை பசுமையாக உருவாக்க வேண்டும். எனது பதவிக்காலம் முடிந்த பின்னரும் இந்த பசுமைப் பணியைத் தொடருவேன்'' என்று மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.

 மக்கள் பார்வைக்கு:

 மாணவர்களின் படைப்புகள் மே 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட 3,276 இலச்சினைகளும், வெற்றி பெற்ற இலச்சினைகளும் வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் வடக்கு அவென்யூ பகுதியில் அமைந்துள்ள வாயில் எண் 35-ல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பசுமை இந்தியாவை உருவாக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர். நாட்டின் முதல் பிரஜை முன்னிலையில் எடுத்து கொண்ட உறுதி மொழியை நாமும் பின்பற்றுவோம்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.