முகப்பு
புதுதில்லி

நடைபாதை தேநீர்க் கடையும், ஒரு ஹிந்தி படைப்பாளியும்!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது.  அதை முறையாக அறிந்து, செயல்படுத்தி முன்னேறுவோர் சிலரே. அவர்களில் ஒருவராக மிளிர்கிறார் தில்லியில் பிளாட்பாரத்தில் தேநீர்க் கடை நடத்த

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது.

 அதை முறையாக அறிந்து, செயல்படுத்தி முன்னேறுவோர் சிலரே. அவர்களில் ஒருவராக மிளிர்கிறார் தில்லியில் பிளாட்பாரத்தில் தேநீர்க் கடை நடத்திவரும் லக்ஷ்மண் ராவ்.

 சிறு வயதில் இருந்தே எழுத்து மீதிருந்த தீராத ஆர்வத்தால் தொடர்ந்து எழுதும் பணியில் ஈடுபட்டு ஹிந்தி எழுத்தாளராக உயர்ந்துள்ளார்.

 ஐ.டி.ஓ. அருகே விஷ்ணு திகம்பர் மார்கில் உள்ள ஹிந்தி பவன் அருகே பிளாட்பாரத்தில் 25 ஆண்டுகளாக நடைபாதையில் சிறிய அளவில் தேநீர் கடை நடத்தியபடி, எழுத்துப் பணியையும் தொடர்ந்து வருகிறார் இவர்.

 வாடிக்கையாளர்களுக்குத் தேநீர் தயாரித்தவாறு, தனது புத்தகங்களை விற்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த லக்ஷ்மண் ராவிடம் கலந்துரையாடியபோது....

 "எனது முதல் நாவல் "ராம்தாஸ்', எனது பள்ளித் தோழர் பற்றிய உண்மைக் கதை. அதன் பிறகு "புதிய உலகின் புதிய கதை' என்ற நூலை எழுதினேன். இரு நூல்களையும் பதிப்பிக்க பல்வேறு பதிப்பகங்களையும், வெளியீட்டாளர்களையும் தொடர்பு கொண்டு முயன்று பார்த்தேன். பலனில்லை.

 இதனால், நானே அதற்கான பணத்தைத் திரட்டி 1997-ல் முதல் நாவலை வெளியிட்டேன். அதன் பிறகு பணம் சேகரித்து அவ்வப்போது நாவல்கள், சமூகக் கதைகள், நாடகங்கள், ஆய்வுகள், தத்துவம் தொடர்பான 12 நூல்களை வெளியிட்டுள்ளேன். இதில் மூன்று நூல்கள் மறு பதிப்பாக வெளிவந்துள்ளன. இன்னும் 12 நூல்கள் அச்சேற காத்திருக்கின்றன. அதற்கான பணம் திரட்டி வருகிறேன்.

 ஆதர்ஷ குரு குல்ஷன் நந்தா

 எனக்குள் எழுத்தாளன் என்ற கனவை ஏற்படுத்தியவர் எழுத்தாளர் குல்ஷன் நந்தா. அவரது நாவல்களை விரும்பிப் படித்தேன். அவரைப் போல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனாலோ என்னவோ எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்திருப்பதாக நினைக்கிறேன்.

 முழுமையான எழுத்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது என் ஆசை. அதற்குப் பொருளாதாரம் பிரச்னையாக இருக்கிறது. புத்தக வெளியீட்டின் மூலம் ஓரளவு பணம் கிடைக்கும் வரை இந்தத் தேநீர்க் கடையைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

 தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை எழுதுவதும், படிப்பதும் எனது வழக்கம். அதன் பிறகு தூங்கச் சென்றுவிட்டு காலை 10 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். பிறகு 12 மணிக்கு தேநீர்க் கடையை திறந்து இரவு 9 மணி வரை நடத்துகிறேன்.

 இதில், தினமும் 200 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாதம் சில ஆயிரங்களுக்கு புத்தக விற்பனையும் நடைபெறுகிறது.

 "1972-ல் தில்லிக்கு வந்தேன்...'

 நான் பிறந்தது மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள தாலேகான் தஷாஷர் கிராமம். சாதாரண குடும்பத்தில்தான் பிறந்தேன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே என்னுள் எழுத்தார்வம் துளிர்விட்டது.

 குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டு, நூற்பாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆலை திடீரென மூடப்பட்டதால் அப்பாவிடம் இருந்து 40 ரூபாய் வாங்கிக் கொண்டு வேலை தேடி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு வந்தேன். அங்கேயும் சரிவர வேலை கிடைக்கவில்லை. அப்போது எனக்கு வயது 22.

 பி.ஏ.பட்டதாரி

 1972-ம் ஆண்டில் வேலை தேடி தில்லிக்கு வந்தேன். பிர்லா மந்திர் தர்ம சாலாவில்தான் தங்கியிருந்தேன். தொடக்கத்தில் கட்டட வேலைகளிலும், உணவு விடுதிகளிலும் வேலை செய்தேன். படிப்பு ஆர்வம் இருந்ததால் அஞ்சல் வழி மூலமாக பள்ளிப் படிப்பையும், பி.ஏ. கலைப் பிரிவில் பட்டப் படிப்பையும் முடித்தேன்.

 தில்லியில் நான் சந்தித்து வரும் மனிதர்களையே எனது நாவலுக்குரிய கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்தேன். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தியே எனது கதை எழுதும் பணி தொடர்ந்தது.

 எழுத்துப் பணி வயிற்றுக்குச் சோறுபோடவில்லை. அதனால், வாழ்க்கை நடத்த பான் மசாலா விற்றேன். பிறகு, ஹிந்தி பவன் அருகே சாலையோரத்தில் தேநீர்க் கடையை ஆரம்பித்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த கடையை இப்போது வரை நடத்தி வருகிறேன். எனது மூத்த மகன் இதேஷ், ஆடிட்டருக்குப் படிக்கிறார். இளைய மகன் பரேஷ் தில்லி பல்கலைக்கழகத்தில் பி.காம். படிக்கிறார்.

 மறக்க முடியாத சம்பவங்கள்

 எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 1984-ம் ஆண்டில் சந்தித்தது. அவரது வாழ்க்கை பற்றி எழுத விரும்புவதாக நான் அவரிடம் தெரிவித்தபோது, நிர்வாகத்தைப் பற்றி வேண்டுமானால் எழுதுங்கள் என்றார். அதன் பிறகு "பிரதம மந்திரி' என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டேன். 2009-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலைச் சந்தித்தேன். அவர் என்னைப் பாராட்டி ஊக்குவித்தார்.

 எனது நூல்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும். தவிர மராட்டியம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதே என் லட்சியம்.

 வாழ்க்கை அதன் திசையில் போய்க் கொண்டிருக்கிறது. உயிருள்ள வரை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்று தன்னம்பிக்கையுடன் கூறியபடி சுவையான சூடான தேநீரை அருந்தக் கொடுத்தார் லக்ஷ்மண் ராவ்.

 சூடும், சுவையும் அவர் தயாரித்த தேநீரில் மட்டுமல்ல, அவரது லட்சியத்திலும் இருப்பதை உணர முடிந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.