முகப்பு
புதுதில்லி

மாநில சுயாட்சிக் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட திமுக

புது தில்லி, மார்ச் 21: "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி'! இது தி.மு.க. வின் கொள்கைகளில் முக்கியமானது. ஆனால், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு, அதுவும் எல்லா மா

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:35 PM
பகிர்:

புது தில்லி, மார்ச் 21: "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி'!

இது தி.மு.க. வின் கொள்கைகளில் முக்கியமானது. ஆனால், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு, அதுவும் எல்லா மாநிலக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தி.மு.க.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைப்பது தொடர்பான சட்டம் திருத்தம் செய்வதற்கான தீர்மானம் திங்கள்கிழமை மக்களவையிலும், செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் கொண்டு வரப்பட்டது.

இந்த மையம் அமைக்கப்பட்டால், அது மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கும் என்று காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், பிகார் உள்பட பத்து மாநில முதல்வர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மாநில அரசுகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இருப்பதால், அந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு மீறிவிட்டது என்று தேசிய கட்சிகளான பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் ஆட்சேபித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான திருத்தம் கொண்டு வரும் தீர்மானத்தை பாஜக கொண்டுவந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீது திங்கள்கிழமை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு பாஜக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள் ஒரே நிலையை எடுத்து, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், மாநில சுயாட்சியைத் தனது தாரக மந்திரமாகக் கொண்ட தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.சட்டத்தை எதிர்த்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் கடைசி நேரத்தில் வெளியே சென்றுவிட்டனர்.

அரசுக்கு நெருக்கடியான காலங்களில் ஆதரவு அளிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கூட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். இதனால், என்.சி.டி.சி. விவகாரத்தில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதே போல், மாநிலங்களவையிலும் என்.சி.டி.சி. விவகாரம் தெடாடர்பான தீர்மானத்தை பாஜக கொண்டு வந்தது. அங்கேயும் மத்திய அரசுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. திரிணமூல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

""என்.சி.டி.சி. விவகாரத்தில் மாநில அமைச்சர்களின் கூட்டம் முடிந்த பிறகே சட்டம் அமல்படுத்தப்படும், அதுவரை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளிக்க வேண்டும்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவாஜ் மக்களவையில் வலியுறுத்தினார். அப்போது அவையில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

தேசிய கட்சியான பாஜக மாநிலங்களின் சுயாட்சிக்காக இந்த சட்டத்தை எதிர்க்கிறது. ஆனால், மாநிலக் கட்சியான திமுக ஆதரிக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றாலும் திரிணமூல் காங்கிரஸ் போன்றவை அரசுக்கு எதிராகவே நிலையை எடுத்துள்ளன.

திமுக திடீரென்று மத்திய அரசுக்கு ஆதரவாக நிலை எடுத்ததற்கு காரணமும் அக்கட்சியால் சொல்லப்படுகிறது.

என்.சி.டி.சி. விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 16-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இரு அவைகளிலும் உத்தரவாதம் அளித்தார்.

இதை ஏற்று மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக திமுக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மாநில சுயாட்சிக் கொள்கை...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.