தூக்குதண்டனை விதிக்காவிட்டால் மகள் சாவுக்கு நீதி கிடைக்காது
துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்காவிட்டால் நீதி கிடைக்காது என்று மாணவயின் பெற்றோர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் கூறினர்.
துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்காவிட்டால் நீதி கிடைக்காது என்று மாணவயின் பெற்றோர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் கூறினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த மாணவியின் வழக்கில் தெற்கு தில்லி விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகுர் ஆகியோரை குற்றவாளிகள் என்றும் அவர்களின் தண்டனை விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் நீதிமன்ற அறையில் கண்ணீர் விட்டு அழுதனர். "குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்; அப்போதுதான் எங்கள் மகளின் சாவுக்கு அர்த்தம் இருக்கும்' என்று அவர்கள் கூறினர்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவயின் பெற்றோர், "குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைத்தால்தான் எங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை போல எதிர்காலத்தில் பிறருக்கு ஏற்படாமல் தடுக்க முடியும். கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் அவரது சாவுக்கும் நீதி கிடைக்கும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகே நாங்கள் நிம்மதியடைவோம்' என்றனர்.
Advertisement
Advertisement
"கடவுளே மகனை திருப்பிக் கொடு': இதற்கிடையே, வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அக்ஷய் தாகுரைக் காண நீதிமன்றத்துக்கு வந்த அவரது தாய் மாலதி தேவி "என்னுடைய மகனை என்னிடம் திருப்பிக் கொடு கடவுளே, அவன் அத்தகைய செயலில் ஈடுபட்டிருக்க மாட்டான்' என்று கண்ணீர் மல்க அழுதார்.
முன்னதாக, தீர்ப்பு வழங்கப்படும் முன்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அக்ஷய் தாகுரிடம் செய்தியாளர்கள் பேசினர். அப்போது, "என்னைத் தனிமையில் விடுங்கள்; பேசும் நிலையில் நான் இல்லை' என்றார் அவர்.