புதுதில்லி

கேஜரிவால் அரசின் மெத்தனப் போக்கே காரணம்: காற்று மாசு தீவிரம் குறித்து பாஜக குற்றச்சாட்டு

DIN

தலைநகர் தில்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதற்கு கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசே காரணம் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றம்சாட்டினார்.
கடந்த சில தினங்களாக தில்லியில் காற்று மாசு மிகக் கடுமையாக நிலவி வருகிறது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதாலும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில், அடர் பனிப்புகை மூட்டம் தில்லியைச் சூழ்ந்துள்ளது. காற்றில் நச்சு மாசுக்களின் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்குத் தில்லியில் உள்ள துர்காபுரி பகுதியில், மனோஜ் திவாரி தலைமையிலான பா.ஜ.கவினர் பல்வேறு அமைப்புகள் மூலமாக பொதுமக்களுக்கு 30,000 முகக் கவசங்களை வெள்ளிக்கிழமை வழங்கினர். இந்நிகழ்வில் முகக் கவசங்களை வழங்கி மனோஜ் திவாரி பேசுகையில், 'கடுமையான காற்று மாசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வெளியில் செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றை அடிக்கடி சுத்தமான நீரால் கழுவ வேண்டும். டெங்கு, சிக்குன்குனியா போன்ற தீவிரமான நோய்கள் பரவியபோது இயங்கியதைப் போல, காற்று மாசு பாதிப்பின் போதும் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்' என்றார். இந்நிகழ்வில், கட்சியின் பிரதேச செயலாளர்கள் மீனாட்சி, நவீன் சந்திரா, கட்சியின் மாவட்டத் தலைவர் கைலாஷ் ஜெயின் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மனோஜ் திவாரி கூறியதாவது:
காற்று மாசுவைத் தடுக்க தில்லி அரசும் உச்ச நீதிமன்றமும் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது ஆதரவை வழங்கி வருகிறோம். கடந்த மூன்று நாள்களாக காற்று மாசு தொடர்பாக பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறேன். கேஜரிவால் அரசின் மெத்தனப் போக்கே காற்று மாசு தீவிரமடையக் காரணமாகும். சிஎன்ஜி வாகனங்கள் தில்லியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்த நிலையை விட இப்போதுள்ள நிலை மோசமாக உள்ளது.
தில்லியில் தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டம் (ஆட்- ஈவன்) நவம்பர் 13- ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இத்திட்டம் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் என்றால், அதை 9-ஆம் தேதியே அமல்படுத்தாமல் ஏன் நான்கு நாள்கள் இடைவெளி விட்டு அமல்படுத்த வேண்டும்?
வாகனக் கட்டுப்பாடு திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், எந்த அடிப்படையில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு அமல்படுத்துகிறது? மரம், செடி கொடிகளுக்கு நீரைப் பாய்ச்சி மாசுவை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று நடைமுறைச் சாத்தியம் இல்லாத விஷயத்தை கேஜரிவால் அரசு கூறி வருகிறது.
தில்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு தூசிதான் பிரதானக் காரணமாகும். ஆனால், அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதையும், வாகனப் புகையையும் பிரதான காரணமாக கேஜரிவால் அரசு கூறி வருகிறது. மக்கள் அதிகளவில் பயணம் செய்யும் அளவிற்கு பொதுப் போக்குவரத்துத் துறையை கேஜரிவால் அரசு நவீனப்படுத்தவில்லை என்றார் மனோஜ் திவாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT