முகப்பு
புதுதில்லி

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களவையில் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மாநிலங்களவையில் வலியுறுத்தினார். 
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் பங்கேற்று மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் திங்கள்கிழமை பேசியதாவது:
தமிழகத்தில் காவிரி டெல்டா படுகையில் விவசாயிகள் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அப்பகுதியில் 10 லட்சம் ஏக்கருக்கு  15 டிஎம்சி நீர்த் தேவையாக உள்ளது.  ஏற்கெனவே கர்நாடகம் 80 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தை மாநில அரசு எடுத்துச் சென்றாலும் மத்திய அரசு கவலைப்படுவதில்லை. மாறி, மாறி வரும் அரசுகள் தமிழகத்தைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 தமிழகத்தில் விளையும் தானியம் தமிழகத்திற்கு மட்டுமின்றி, தேசம் முழுமைக்கும் செல்வதை மனத்தில் கொண்டு இந்த விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தவும்,  பிரச்னைக்குத் தீர்வு காணவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
தமிழகத்தின் கீழடியில் அகழ்வுப் பணிக்கான 110 ஏக்கர் நிலத்தில், ஒரு சதவீதம்கூட  அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படவில்லை.  இதற்கான பணியில் தொல்லியல் துறை ஆர்வம் காட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கீழடியில் அகழ்வுப் பணியின் போது கண்டறியப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்களை காட்சிப்படுத்த   மாநில அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.  ஆனால்,  அதற்கான அருங்காட்சியகப் பணிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.  கீழடியில் இன்னும் ஆய்ந்து அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டால் மனித நாகரிகத்தின் சில முக்கியமான விஷயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே,அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் காரணமாக  சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 
ஆகவே,  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும்,  சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதில் மானுட சமுதாய  நலத்திற்கான வாழ்வியல் அம்சங்கள், வழிகாட்டும் அறநெறிகள் உள்ளன.  இந்தியாவில் தேசியப் பறவை, மலர் இருப்பது போல திருக்குறளையும் தேசிய  நூலாக்க வேண்டும். திருவள்ளுவரின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என்றார் டி.கே. ரங்கராஜன்.

முழு கட்டுரையைப் படிக்க →