முகப்பு
புதுதில்லி

மாசு கட்டுப்பாடு: "மாநில அரசுகளின் முயற்சிகளை  மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது'

மாசுக் கட்டுப்பாடு, மேலாண்மைக்காக மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக மக்களவையில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மாசுக் கட்டுப்பாடு, மேலாண்மைக்காக மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறையின் இணையமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக  மயிலாடுதுறை  மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன்,  "பொது கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள் (சிஇடிபி), கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எஸ்டிபி) ஆகியவற்றை அமைக்கவும்,  வலுப்படுத்தவும் தமிழ்நாடு உள்பட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியிருக்கிறதா?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்களவையில் மத்திய இணையமைச்சர் மகேஷ் சர்மா திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு: மாசுக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையில் மாநில அரசுகளின் முயற்சிகளை மத்திய சுற்றுச்சூழல்,  வனத்துறை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. சிறு தொழில் குழுமப் பகுதிகளில் வெளியேறும் தொழிற்சாலை மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் (சிஇடிபி) அமைப்பது, தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொடர்புடைய கழிவுநீர் உள்கட்டமைப்பு வசதி , கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்பட  நதிகளின் மாசுவைக் தணிக்கும் பணிகளுக்கான நிதியுதவிகளை அமைச்சகம் அளித்து வருகிறது.
இதுபோன்று கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.  நிகழ் ஆண்டில் இந்த நடவடிக்கைகளுக்காக  தமிழகத்துக்கு  நிதி ஏதும் வழங்கப்படவில்லை.  நமாமி கங்கை திட்டம்,  மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் பொலிவுறு நகரங்கள் திட்டம்,  நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புனரமைப்புக்கான அடல் திட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்பட கழிவுநீர் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்வதுடன் மதிப்பீடும் செய்து வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →