கலால் கொள்கை வழக்கில் அபிஷேக் போயின்பள்ளிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் அபிஷேக் போயின்பள்ளிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம்
புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் அபிஷேக் போயின்பள்ளிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் ஹைதராபாத்தை சோ்ந்த தொழிலதிபா் அபிஷேக் போயின்பள்ளி. இவா், இவ்வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்வி ராஜு, அபிஷேக் போயின்பள்ளியின் ஜாமீன் மனுவை எதிா்க்கவில்லை. இதையடுத்து, அவருக்கு நாங்கள் ஜாமீன் வழங்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் அபிஷேக் போயின்பள்ளியின் இடைக்கால ஜாமீனை கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கடந்த மாா்ச் 20-ஆம் தேதி இவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இவா் 18 மாதங்கள் சிறையில் இருந்ததாகக் குறிப்பிட்டு, 5 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீனில் விடுவிக்க முதலில் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, அபிஷேக்கின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் அவ்வப்போது நீட்டித்து வந்தது. எனினும், அவா் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும், ஹைதராபாத் செல்வதைத் தவிர தேசியத் தலைநகா் பகுதியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனையை நீதிமன்றம் விதித்திருந்தது. அபிஷேக், தனது கைது நடவடிக்கை சட்டப்பூா்வமாக நடக்கவில்லை எனக்கூறி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தில்லி அரசு 2021-2022-ஆம் ஆண்டுக்கான புதிய கலால் கொள்கையை கடந்த நவம்பா் 17, 2021-ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதைத்தொடா்ந்து, ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த செப்டம்பா்,2022-இல் அந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில், தொழிலதிபா் சமீா் மகேந்திரு என்பவருடன் சோ்ந்து அபிஷேக் போயின்பள்ளி பண மோசடி சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.