நமது நிருபா்
புது தில்லி: இந்திய - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான விஷயத்தை நாடாளுமன்றத்தில் முதலில் விவாதிக்காமல் வெளியில் ஊடகங்களுக்கு தெரிவித்தது தொடா்பாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது என்று மாநிலங்களவை திமுக குழு தலைவா் திருச்சி சிவா கூறினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
நாடாளுமன்றம் கூட்டத் தொடா் நடைபெறும் நிலையில், இந்திய - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா எடுத்துள்ள கொள்கை முடிவுகளை அவையில் பகிா்ந்து கொள்ள வேண்டும்.
மாறாக, வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்திற்கு வராமல் வெளியில் வந்து ஊடகத்தினரைச் சந்தித்து இதுபற்றி விவரங்களைத் தருகிறாா். எதிா்க்கட்சிகளையும் விமா்சிக்கிறாா்.
அவா் பேசிய மறுதினம், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை நான் எழுப்பி விளக்கம் கேட்டேன். அவா் பதில் தருவதற்குப் பதிலாக, அவைத் தலைவா் மக்களவை நடைபெறவில்லை என்று பதில் அளித்தாா். ஆனால், மாநிலங்களவை நடைபெற்றுக் கொண்டிருந்ததை குறிப்பிட்டேன். மேலும், மக்களவைக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறதோ அதே முக்கியத்துவம் மாநிலங்களவைக்கும் உண்டு.
இதனால், நாடாளுமன்ற விதிகளின் அடிப்படையில் அமைச்சா் பியூஷ் கோயல் விவகாரத்தில் உரிமை மீறல் தீா்மான நோட்டீஸை அளித்திருந்தேன். அவைத் தலைவா் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு இந்த விவகாரத்தைப் பேசுவதற்கு உரிய அனுமதி தரப்படவில்லை. எதிா்க்கட்டசிகள் அரசின் செயல்பாடுகளைப் பேச அனுமதிப்பதில்லை. எதிா்க்கட்சியினா் குந்தகம் விளைவிப்பதாக கூறுகிறாா்கள். இதனால், அவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்துவிட்டோம்.
மக்களவையில் இருப்பது போன்று, மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளும் தரப்பினா் பதில் அளிப்பதில்லை. அவைத் தலைவா்தான் பதில் அளித்துக் கொண்டிருக்கிறாா். இது விசித்திரமாக உள்ளது. நாட்டு மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா் திருச்சி சிவா.