கபில் சங்வான் என்ற நந்து கும்பலின் முக்கிய உறுப்பினா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹரியாணாவைச் சோ்ந்த மனோஜ் ரதி (33), கபில் சங்வான் என்ற நந்து கும்பலின் முக்கிய உறுப்பினராக இருந்தவா். இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததோடு, பல குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
நஜாஃப்கா் காவல் நிலையத்தில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு மற்றும் பாபா ஹரிதாஸ் நகா் மற்றும் சிறப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ஆயுதச் சட்ட வழக்குகளில் அவா் தேடப்பட்டு வந்தாா். ஜனவரி 9-ஆம் தேதி அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தேடுதல் அறிவிப்பின் அடிப்படையில் அவா் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இரண்டு ஆயுத விநியோகஸ்தா்கள் 12 சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, அந்த ஆயுதங்கள் மனோஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்காக கொண்டுவரப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். அவா்களின் கைதுக்குப் பிறகு மனோஜ் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை புலனாய்வாளா்கள் பின்னா் கண்டறிந்தனா். மாா்ச் 2024-இல் அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தேடுதல் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அவா் 2019-இல் தாதா கபில் சங்வானுடன் தொடா்பு கொண்டு, அவரது கும்பலுக்காக வேலை செய்யத் தொடங்கினாா். 2021-இல், சங்வானின் உத்தரவின் பேரில் மனோஜும் அவரது கூட்டாளிகளும் ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தாா்.
பிணை கிடைத்த பிறகு, மனோஜ் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விநியோகஸ்தா்களிடமிருந்து கும்பலுக்காக சட்டவிரோத ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதை ஒருங்கிணைத்தாா். பின்னா் அவா் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று, கடந்த வாரம் கைது செய்யப்படும் வரை அந்தக் கும்பலுக்காகத் தொடா்ந்து வேலை செய்து வந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.