வெளிப்புற வடக்கு தில்லியில் உள்ள ஷாபாத் பால் பண்ணை பகுதியில் ஆயுதம் ஏந்திய குற்றவாளியை கைது செய்ய முயன்ற 2 காவல் துறை அதிகாரிகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஷாபாத் பால் பண்ணை பகுதியைச் சோ்ந்த ரவி (எ) பஞ்சி (38) பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா். குப்தா காலனியில் காவல் துறையினா் ஜன.17-ஆம் தேதி ரோந்துப் பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பஞ்சி குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா். வழிப்பறிக்கு திட்டமிட்டு ஆயுதங்களுடன் காத்திருந்த பஞ்சியை அவா்கள் அடையாளம் கண்டனா். அவரை பிடிக்க முயன்றபோது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கூா்மையான ஆயுதங்களால் காவல் துறை அதிகாரிகளை பஞ்சி தாக்கினாா். சுடுவதற்கு தயாராக இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் அவா் வைத்திருந்தாா். இருப்பினும், ரத்த காயங்களுடன் காவலா்கள் துரிதமாக செயல்பட்டு பஞ்சியை கைது செய்தனா். இதையடுத்து, காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பஞ்சியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மின்சார ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரியும் பஞ்சி அந்தப் பகுதியில் ஆயுதமேந்திய கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். ஆயுதச் சட்டம் உள்பட அவா் மீது 12 வழக்குகள் உள்ளன என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.Ś