ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பு
தில்லி பொதுப் பணித் துறை வசம் உள்ள சாலைகளின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் உள்ள பிரச்னைகளுக்கு
தில்லி பொதுப் பணித் துறை வசம் உள்ள சாலைகளின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தில்லி பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தில்லி பொதுப் பணித் துறைக்கே அதிகாரம் இல்லை. நகர சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சிகளுக்குதான் அதிகாரம் உள்ளது. தங்கள் தொகுதி சாலைகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன என சுமார் 35 எம்எல்ஏக்கள் என்னிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்ல தடையாக உள்ளது. ஆகையால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தில்லி சட்டப்பேரவையின் நிலைக்குழுவுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு தீர்வு காணும்.
மேலும், பிற மாநிலங்களில் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண என்ன மாதிரியான சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு நடத்தும். இந்தக் குழுவில் மதன் லால், சௌரப் பரத்வாஜ், நரேஷ், ஜெகதீஷ் பிரதான், ஓம் பிரகாஷ் சர்மா ஆகிய எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனர் என்றார் சத்யேந்தர் ஜெயின்.