உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டேன்:ஸ்வாதி மாலிவால் திட்டவட்டம்
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை வழங்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்களில்
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை வழங்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றாத வரை உண்ணாவிரதத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்று தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிறுமிகளுக்கெதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் ஸ்வாதி மாலிவால் மேற்கொண்டு வரும் காலவரையறையற்ற உண்ணாவிரதம் புதன்கிழமை 6-ஆவது நாளாக தொடர்ந்தது. அப்போது செய்தியாளர்களிடம் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை வழங்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றாத வரை உண்ணாவிரதத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்றார்.
இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலின் போராட்டத்துக்கு எய்ம்ஸ் உறைவிட மருத்துவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எய்ம்ஸ் உறைவிட மருத்துவர் சங்க தலைவர் ஹர்ஜித் பட்டியா தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சமூகப் பொறுப்புள்ள, மனச்சாட்சியுள்ள எந்தவொரு மனிதனும் ஸ்வாதி மலிவாலின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அந்த வகையில் அவரை நேரில் சந்தித்து நாங்கள் ஆதரவைத் தெரிவித்தோம்.
மேலும், இனியும் தாமதிக்காமல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவிலும், உத்தர பிரதேச மாநிலம், உன்னவாவிலும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாகத் தண்டிக்க கோரியும், பாலியல் குற்றங்களை நீதித் துறை விசாரிக்கும்போது அதில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யக் கோரியும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.