எஸ்டிஎம்சி பகுதியில் விளம்பரங்கள்: சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம்
தில்லியில் மகிபால்பூரில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்லும் நெடுஞ்சாலையில் விளம்பரத் தட்டிகள் வைப்பதில்
தில்லியில் மகிபால்பூரில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்லும் நெடுஞ்சாலையில் விளம்பரத் தட்டிகள் வைப்பதில் சர்வதேச நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் வியாழக்கிழமை கூறியதாவது: இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.18 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மகிபால்பூரில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்லும் 4 கிலோ மீட்டர் தூர நெடு சாலை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு சொந்தமானது. இந்தச் சாலையோரமாக விளம்பரத் தட்டிகள் வைப்பது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, பி.எம்.டபிள்யூ., ஆப்பிள், சாம்சுங் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இந்த நெடுங்சாலையில் விளம்பரத் தட்டிகளை வைப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால், விளம்பரத் தட்டிகளை வைப்பது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி நிலவுகின்றன.
மாநகராட்சிக்குள்பட்ட மற்றைய பகுதிகளில் 18 சதுர மீட்டர் அளவுக்கே விளம்பரத் தட்டிகள் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த நெடுங் சாலையில் 70 சதுர மீட்டர் அளவுக்கு விளம்பரத் தட்டிகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என்றனர்.