முகப்பு
புதுதில்லி

டிராக்டர் கடன் பெற்ற விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும்:  ஜேட்லியிடம் முன்னாள் திமுக எம்பி மனு

தமிழகத்தில் டிராக்டர் கடனுக்காக விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கையைக் கைவிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்

Updated On : 30 மார்ச், 2018 at 12:55 AM
பகிர்:

தமிழகத்தில் டிராக்டர் கடனுக்காக விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கையைக் கைவிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவரும், திமுக விவசாயிகள் அணிச் செயலரும், முன்னாள் எம்பியுமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அமைச்சர் அருண் ஜேட்லியை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். அதில் தமிழகத்தில் கோயம்புத்தூர் வட்டாரத்தில் தேசிய வங்கிகளில் விவசாயிகள் டிராக்டர் கடன் பெற்றிருந்தனர். தற்போது, அக்கடனை வசூலிக்கும் வகையில் வங்கிகள் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதை நிறுத்த உத்தரவிட வேண்டும். மேலும், வறட்சியைக் காரணமாகக் கொண்டு ஓராண்டு காலத்திற்கு கடன் வசூலையும் தள்ளி வைக்க வேண்டும். விவசாய விளைபொருள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படும் இயந்திரங்கள், அதன் உதிரிபாகங்கள்ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து கே.பி. ராமலிங்கம் வியாழக்கிழமை கூறுகையில், "மனுவை பெற்றுக் கொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் பேசி ஜப்தி நடவடிக்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விவசாய விளைபொருள்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறினார். அமைச்சரின் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தன என்றார் கே.பி. ராமலிங்கம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.