சிசிடிவி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை : துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் மனு
சிசிடிவி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை தில்லி காங்கிரஸ்
சிசிடிவி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே. வாலியா, அர்விந்தர் சிங் லவ்லி, ஹாரூண் யூசுஃப், ராஜ்குமார் செளகான் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறியது:
சிசிடிவி பொருத்தும் திட்டத்துக்கு 2015- ஆம் ஆண்டு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது அந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ. 130 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது இந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ. 571.40 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் கேட்டபோது, சிசிடிவி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாக எவ்வித கோப்பும் தனக்கு கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்தார். ஆளுநர் ஒப்புதல் இல்லாமல், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது தெளிவாகிறது.
தில்லியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்தில் சீன நிறுவனத்தின் ஹிக்விஷன் கேமராக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகர் தில்லியின் பாதுகாப்பில் தில்லி அரசு சமரசம் செய்துள்ளது.
மகளிர் பாதுகாப்பு என்ற பெயரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில் தில்லி அரசு பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் துணைநிலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையத்திடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்கப்படும்' என்றார் அஜய் மாக்கன்.