புதுதில்லி

அதிமுகவின் அடையாளமே பொதுச் செயலாளர் பதவிதான்: டிடிவி தினகரன் தரப்பு வாதம்

DIN

"அதிமுகவின் அடையாளமே பொதுச் செயலாளர் பதவியும், அதற்கு நடைபெறும் தேர்தலும்தான்' என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி முன்வைத்த வாதம்:
அதிமுகவில் பொதுச் செயலாளர், அக்கட்சியின் 1.5 கோடி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார். கட்சிக்குத் தலைமை ஏற்கும் பொதுச் செயலாளர், கட்சியின் மாநாடுகளுக்குத் தலைமை வகிப்பார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகள், முக்கிய முடிவுகள் ஆகியவை பொதுச் செயலாளரால் எடுக்கப்படுகிறது. கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்குப் பொதுச் செயலாளரே தலைமை வகிப்பார்.
கட்சியின் விதிகளைத் திருத்துவதற்குப் பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில்தான் வி.கே. சசிகலாவும் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயகம், குடியரசு, மதச்சார்பின்மை, கூட்டாட்சிக் கொள்கை போன்றவை நமது நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளாக உள்ளன. அதேபோல அதிமுக பொதுச் செயலருக்கும் உச்சபட்ச அதிகாரங்கள் உள்ளன.
அதிமுகவின் அடையாளமாக இருப்பவை பொதுச் செயலாளர் பதவியும், அதற்கு நடைபெறும் தேர்தலும்தான். இது மாற்றம் செய்ய முடியாத விதியாகும். ஆனால், இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சி புதிய கட்சியாகவும், அதற்குரிய கட்சியின் விதிகள் என்றே கொள்ள முடியும் என்றார் அவர்.  வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த விசாரணையையொட்டி,  தில்லி உயர்நீதிமன்றத்துக்குத் தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம் வெள்ளிக்கிழமை வந்திருந்தார்.
 பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் ஒதுக்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக டிடிவி தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 'தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT