முகப்பு
புதுதில்லி

ஏழைகளுக்கு வரப்பிரசாதமாகத் திகழும் "மொஹல்லா கிளினிக்'

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வதுண்டு. உலகிலேயே காற்று மாசு மிகவும் அபாயகரமான 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வதுண்டு. உலகிலேயே காற்று மாசு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள நகரங்களில் ஒன்றான தில்லி மாநகரில் நோயற்ற வாழ்வு என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மருத்துவச் செலவுகளால் தாங்கள் ஈட்டிய செல்வங்களை இழந்து கொண்டிருப்பவர்கள்தான் இந்த நகரத்தில் அதிகம் உள்ளனர். தங்கள் கைப் பணத்தை செலவழித்தே மருத்துவச் செலவுகளை சமாளிக்க வேண்டும் அல்லது சிகிச்சையே பெறாமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த அடித்தட்டு மக்களுக்கு, தில்லி அரசு தொடங்கியுள்ள 'மொஹல்லா கிளினிக்' எனும் மருந்தகங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
மொஹல்லா என்றால் குடியிருக்கும் பகுதி என்று பொருள் கொள்ளலாம். பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களின் குடியிருப்புப் பகுதிகளில், அவர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள்தான் இந்த மொஹல்லா கிளினிக்குகள். சுமார் 1.86 கோடி மக்கள்தொகை கொண்ட தில்லியில் பத்து விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஜேஜே காலனி என்று சொல்லப்படும் குடிசை அல்லது கச்சா வீடுகள் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி அளிப்பதே இந்த மொஹல்லா கிளினிக்குகளின் நோக்கமாகும்.
 ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவ சேவைகளில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மாநில பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கான நிதி ஒதிக்கீட்டையும் கணிசமாக உயர்த்தியது. தற்போது மொத்த நிதி ஒதுக்கீட்டில் மருத்துவ செலவுக்காக 12.5 சதவிகிதம் வரையில் ஒதுக்கப்படுகிறது. மொஹல்லா கிளினிக் மற்றும் பல்துறை கிளினிக்குக்காக 2018 -19 பட்ஜெட்டில் ரூ.403 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு அடுக்கு மருத்துவ வசதிகளில், முதல் கட்ட ஆரம்ப சுகாதார மையங்களாக அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை மருத்துவத் தேவைகளை கவனிக்க மொஹல்லா கிளினிக்குகளும், அதற்கு அடுத்த கட்டமாக 24 பல்துறை கிளினிக்குகளும், மூன்றாம் கட்டமாக தில்லி அரசு நடத்தும் 38 மருத்துவமனைகளும், அதற்கும் ஒரு படி மேலாக பல்துறை சிறப்பு மருத்துவமனைகளும் தற்போது தில்லியில் இயங்குகின்றன. 
முதல் மொஹல்லா கிளினிக், ஃபிராகரி எனும் இடத்தில் ராஜீவ் காந்தி ஜேஜே காலனி நிவாரண முகாமில் 2015வ, ஜூலையில் தொடங்கப்பட்டது. தற்சமயம் 189 கிளினிக்குகள் இயங்குகின்றன. இதுவரை 80 லட்சம் மக்கள் இந்த கிளினிக்குகளால் பயனடைந்துள்ளனர். 2020- ஆம் ஆண்டிற்குள் ஆயிரம் கிளினிக்குகள் வரையில் தொடங்க வேண்டும் என்பது அரசின் இலக்கு. இந்த ஆயிரம் கிளினிக்குகளும் இயங்கத் தொடங்கினால், அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஐந்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் ஒரு கிளினிக் என்ற இலக்கையும், பத்தாயிரம் மக்கள்தொகைக்கு ஒரு கிளினிக் என்ற இலக்கையும் எட்டிவிடலாம் என்றும் தில்லி அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.
தெருமுனை மருந்தகங்கள் என்றும் சொல்லக்கூடிய இந்த மொஹல்லா கிளினிக்குகள், அடித்தட்டு மக்கள் எளிதாக வந்து போகும்படி அவர்களின் குடியிருப்புப் பகுதிகளிலேயே தொடங்கப்படுவதால், சாதாரண நோய்களுக்காக மக்கள் மருத்துவமனை வரையில் சென்று கியூவில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. ஒரு நாள் கூலியை இழக்க வேண்டியதில்லை. போக்குவரத்து செலவுக்காக பணத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. சிறு பிரச்னைகளுக்கு மொஹல்லா கிளினிக்குகளிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேரும் கூட்டத்தை கணிசமாகக் குறைக்க முடிகிறது. அதனால், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் தங்கள் நேரத்தையும் கவனத்தையும், தீவிர அல்லது கடுமையான நோயுடன் வருபவர்களின் மேல் செலவிட முடிகிறது.
உதாரணமாக, 2016-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தில்லியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட போது, மொஹல்லா கிளினிக்குகள், நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை, சிகிச்சை போன்றவற்றை வழங்கி அரசு மருத்துவமனைகளை முற்றுகையிடும் கூட்டத்தை வெகுவாகக் குறைத்தன. மேலும், மொஹல்லா கிளினிக்குகள் தொடங்குவதற்கு முன்பு பேருந்து ஏறி மருத்துவமனைக்குச் செல்ல பணமும் நேரமும் இல்லாத தினக் கூலியை நம்பி வாழும் மக்கள், தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவர்களிடம், பெரும்பாலும் போலி மருத்துவர்களிடம் சென்று கொண்டிருந்தனர். மொஹல்லா கிளினிக்குகள் இயங்கும் பகுதிகளில் போலி மருத்துவர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. 
மொஹல்லா கிளினிக்குகளில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல், வயிற்றுப் பிரச்னைகள், தோல் வியாதிகள், காயங்கள், சுவாசக் குழாய் சம்பத்தப்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோய்களை குணப்படுத்துவதற்கான 109 அத்தியாவசிய மருந்துகள் வரையில் இலவசமாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. 
தேவையானால் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடங்களில் நோயாளிகளின் ரத்தம், சிறுநீர் போன்றவை இலவசமாக சோதிக்கப்பட்டு நோய்கள் தக்க சமயத்தில் கண்டறியப்படுகின்றன. மொஹல்லா கிளினிக்குகளில் 212 நோய் கண்டறியும் பரிசோதனைகள் வரை இலவசமாக செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்குகளில் சிகிச்சையளிக்க முடியாத நோயாளிகள் அடுத்த நிலையில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 
வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற ஆறு நாள்களும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயங்கும் இந்த மொஹல்லா கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் இதர வேலைகளை கவனிக்க ஒரு வார்டு பாய் என்று மூன்று பேர்கள் நியமிக்கப்படுகின்றனர். மொஹல்லா கிளினிக்குகள் வாடகை வீடுகளில் அல்லது எளிதாக இடம் பெயர்க்கத்தக்க மரத்தினாலான குடில்களில் இயங்குகின்றன. 
 தில்லி அரசின் மொஹல்லா கிளினிக், பல உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன், இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு வேறு மாநிலங்களிலும், ஏன் வேறு நாடுகளிலும் கூட இப்படிப்பட்ட கிளினிக்குகளைத் தொடங்கலாம் என்ற சிந்தனையும் உருவாகியுள்ளது. சென்ற ஆண்டு இறுதியில் தொடாபூர் எனும் இடத்தில் உள்ள மொஹல்லா கிளினிக்கை பார்வையிட்ட பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரும், நாராயணா சுகாதாரத்தின் நிறுவனருமான டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டி, தில்லி முதல்வருக்கு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். நார்வே நாட்டின் முன்னாள் பிரதமரும், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜெனரலுமான குரோ ஹார்லெம் ப்ரவுண்ட்லண்டும், இந்தத் திட்டத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அமெரிக்காவிலும் மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கும் நேரம் வந்துவிட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது. தில்லி மொஹல்லா கிளினிக்குகளைப் பின்பற்றி பஞ்சாப், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களும் இப்படிப்பட்ட மருந்தகங்களைத் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 
அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் சூரத் நகரங்களில் மொஹல்லா கிளினிக்குகளைத் தொடங்கப் போவதாக குஜராத் மாநில சுகாதாரத் துறை தீர்மானம் செய்துள்ளது. மத்திய அரசின் நீத்தி ஆயோக் கூட இந்த மொஹல்லா கிளினிக் 'மாதிரியை'சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், மொஹல்லா கிளினிக்குகள் பெற்றுள்ள பாராட்டுகளைப் பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த கிளினிக்குகளின் மேல் எழுந்துள்ள சில குற்றச்சாட்டுகளின் மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. முதலாவதாக எல்லா கிளினிக்குகளுமே நன்றாகச் செயல்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. ஏற்கெனவே நன்றாக இயங்கி கொண்டிருக்கும் மருந்தகங்களின் அருகில் தொடங்கப்பட்டுள்ள மொஹல்லா கிளினிக்குகளுக்கு மிகக் குறைவான நோயாளிகளே வருகின்றனர். அப்படிப்பட்ட கிளினிக்குகள் செயலற்றுக் கிடக்கின்றன. மேலும்,கிளினிக்குகளில் உள்ள மருத்துவரைப் பொருத்தும், அந்த கிளினிக்கின் செயல்பாடு உள்ளது. இந்தப் பணியில் அதிக வருமானம் இல்லை என்பதால் பணியிலிருந்து ஒய்வு பெற்ற மருத்துவர்களே பெரும்பாலும் மொஹல்லா கிளினிக்குகளில் பணியாற்ற முன்வருவதாகச் சொல்லப்படுகிறது.
மொஹல்லா கிளினிக்குகளின் மருத்துவரும் இதரப் பணியாளர்களும் பெறும் வருமானம் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொருத்து இருக்கிறது. ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவருக்கு ரூ.30, செவிலியருக்கு ரூ.20, வார்டு பாய்க்கு ரூ.10 என்ற வீதத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால், நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவது, நோயாளிகளை அனாவசியமாக திரும்பத் திரும்ப வரச் சொல்வது போன்ற தவறான வழிகளை சில மருத்துவர்கள் பின்பற்றுவதாகச் சொல்லப்படுகிறது. எந்த ஒரு கிளினிக்கிலும் நாள் ஒன்றுக்கு 60 - 70 நோயாளிகளுக்கு மேல் கணக்கு காண்பித்தால், அந்த கிளினிக்கின் பதிவேடுகள் முற்றிலும் சரிபார்க்கப்படுகிறது என்று இதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிளினிக் திறப்பதற்கும் சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, நில மேம்பாட்டுத் துறை, தில்லி மாநகராட்சி என்று அரசின் பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. மொஹல்லா கிளினிக்குகள் திறப்பதற்குத் தகுந்த இடம் கிடைப்பதில் நிறைய பிரச்னைகள் உள்ளன .இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டிற்குள் ஆயிரம் கிளினிக்குகள் என்ற இலக்கை அடைவது சாத்தியமா என்றக் கேள்வியும் எழாமல் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.