துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம்: ஆஷிஷ் பாண்டேவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவத்தில் கைதான பகுஜன் சமாஜ்
தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவத்தில் கைதான பகுஜன் சமாஜ் கட்சியைச் (பிஎஸ்பி) சேர்ந்த முன்னாள் எம்பி ராகேஷ் பாண்டேயின் மகன் ஆஷிஷ் பாண்டேயை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டிய தேவை எழவில்லை என போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆஷிஷ் பாண்டேயை நவம்பர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர சிங் உத்தரவிட்டார். முன்னதாக, ஜாமீன் கோரும் ஆஷிஷ் பாண்டேயின் மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. லக்னௌவைச் சேர்ந்த ஆஷிஷ் பாண்டே, தில்லி ஆர்.கே. புரத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சம்பவத்தன்று முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனான கௌரவ் கன்வர் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விடியோ அக்டோபர் 14-ஆம் தேதி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து, ஆஷிஷ் பாண்டே மீது ஆர்.கே. புரம் போலீஸார் அக்டோபர் 16-ஆம் தேதி ஆயுதச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனிடையே, தில்லி நீதிமன்றத்தில் அக்டோபர் 18-ஆம் தேதி ஆஷிஷ் பாண்டே சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆயுதச் சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆஷிஷ் பாண்டேவுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸில் கௌரவ் கன்வர் புகார் அளித்திருந்தார். அதில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலுக்கு தனது பெண் நண்பருடன் இரவு உணவருந்துவதற்காகச் சென்றதாகவும், அப்போது, ஆஷிஷ் பாண்டேயும், அவரது நண்பர்களும் தங்களிடம் வந்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பாண்டே அவரது துப்பாக்கியைக் காட்டி கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.