பேடிஎம் நிறுவனரிடம் பணம் கேட்டு மிரட்டல்: ஊழியர்கள் மூவர் கைது
"பேடிஎம்' மின்னணு வர்த்தக நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைத் திருடி, அதை வெளியிடுவதாக மிரட்டி அந்த
"பேடிஎம்' மின்னணு வர்த்தக நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைத் திருடி, அதை வெளியிடுவதாக மிரட்டி அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ.20 கோடி பறிக்க முயன்ற பெண் உள்ளிட்ட மூவரை நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட மூவரும் பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து நொய்டா காவல்துறை அதிகாரி அஜய் பால் சர்மா கூறியதாவது: பேடிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் சேகர் சர்மா, நொய்டா காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், "எனது தனிச் செயலராக இருந்த பெண்ணும், இரு ஊழியர்களும் சேர்ந்து நிறுவனம் தொடர்பான ரகசியத் தகவல்களை திருடியுள்ளனர்.
மேலும் அந்தத் தகவல்களை பொதுவில் கசியவிட்டு நிறுவனத்துக்கு நஷ்டத்தையும், அவதூறையும் ஏற்படுத்தாமல் இருக்க ரூ.20 கோடி கேட்டு மிரட்டுகின்றனர்' என்று கூறியிருந்தார். அவர் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், செக்டார் 20 காவல் நிலையத்தைச் சேர்ந்த அந்த தனிப்படையினர், பேடிஎம் நிறுவன உரிமையாளரின் தனிச் செயலரான பெண்ணையும், மேலும் இரு ஊழியர்களையும் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தின் மூளையாக, அந்தப் பெண் தனிச் செயலரே செயல்பட்டது தெரியவந்துள்ளது. வழக்குடன் தொடர்புடைய மேலும் ஒரு நபரை தேடி வருகிறோம். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல்துறை அதிகாரி அஜய் பால் சர்மா கூறினார்.