மோட்டார் வாகனத் திருட்டைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்: தில்லி அரசு திட்டம்
தில்லியில் மோட்டார் வாகனங்கள் திருட்டைத் தடுக்க "மைக்ரோடாட்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தில்லி அரசின் உள்துறை திட்டமிட்டு வருவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தில்லியில் மோட்டார் வாகனங்கள் திருட்டைத் தடுக்க "மைக்ரோடாட்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தில்லி அரசின் உள்துறை திட்டமிட்டு வருவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தில்லியில் கடந்த மாதம் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசியத் தலைநகரில் வாகனங்கள் பதிவுக்காக வாகனத் தடுப்பு கருவி போன்ற பல்வேறு பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்துவதை கட்டாயமாக்குவது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். வாகனத் திருட்டு என்பது தில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் 27 ஆயிரத்து 780 வாகனங்கள் திருட்டுப் போயுள்ளன.
இது குறித்து தில்லி அரசின் உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியில் மோட்டார் வாகனங்கள் திருட்டைத் தடுக்க மைக்ரோடாட் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த மைக்ரோடாட் தொழில்நுட்பமானது தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, தைய்வான், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மைக்ரோடாட் என்பது மிக நுண்ணிய அளவுள்ள பிரத்யே வடிவத்துடன் கூடிய பொருளாகும். இவை ரகசிய குறியையும், தனித்துவ எண்களையும் கொண்டிருக்கும். மைக்ரோடாட்டுடன் கூடிய வாகனங்கள் குறியைப் பயன்படுத்துதல் முழு வாகன அடையாளம் (டபிள்யூஓவிஎம்) என அழைக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பமானது உலகம் முழுவதும் மோட்டார் வாகனங்கள் திருட்டைத் குறைக்கவும், தடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டபிள்யூஓவிஎம் தொழில்நுட்பத்தின்கீழ் தனித்துவ அடையாளம் கொண்ட ஆயிரக்ணக்கான உலோக மைக்ரோடாட்டுகள் வாகனங்கள் மீது குறியிடப்படுகின்றன. இந்த தனித்துவ அடையாள மைக்ரோடாட்டானது வாகனங்களின் பதிவு எண்களுடன் இணைக்கப்படுகின்றன.
வாகனத்தின் ஒவ்வொரு பகுதியும் வாகனங்களின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால், வாகனத்தை தனித்தனியாக பிரித்தெடுத்தால்கூட அதன் உரிமையாளர் கண்டுபிடிக்க முடியும்' என்றார் அந்த அதிகாரி.