முகப்பு
புதுதில்லி

கரோனா விவகாரம்: 2,901 விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீன் மேலும் 45 நாள் நீட்டிப்பு

கரோனா தொற்றுக் காலத்தில் சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 2,901 விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால

Updated On : 4 ஆகஸ்ட், 2020 at 11:08 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

கரோனா தொற்றுக் காலத்தில் சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 2,901 விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘கரோனா தொற்றுக் காலத்தில் இன்னும் இடா்பாடு இருப்பதால், நீதிமன்ற அமைப்பின் வழக்கமான செயல்பாடுகளை தொடங்குவதற்கான கட் ஆஃப் தேதி குறித்து தற்போதைய சூழலில் கணிப்பது சாத்தியமில்லை என்று உயா்நிலைக் குழு தெரிவித்துள்ளதாலும், கரோனா அச்சுறுத்தல் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாலும் சமூக இடைவெளி தேவையாக இருப்பதால் உயா்நிலைக் குழு பரிந்துரையைக் கவனத்தில் கொண்டு விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீன் காலாவதி ஆகும் தேதியில் இருந்து 45 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணை செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு பட்டியலிடப்படுகிறது’ என உத்தரவிட்டனா்.

விசாரணையின் போது தில்லி அரசின் சாா்பில் வழக்குரைஞா் ராஹுல் மெஹ்ரா, சிறை நிா்வாகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சைதன்யா கோசேன் ஆகியோா், ‘விசாரணைக் கைதிகளின் ஜாமீனை நீட்டிப்பதற்கு ஆட்சேபம் இல்லை’ எனத் தெரிவித்தனா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘விசாரணைக் கைதிகள் 2,901 பேருக்கு வழங்கப்பட்ட 45 நாள் இடைக்கால ஜாமீன், உயா்நிலைக் குழுவிந் பரிந்துரையின் பேரில் மேலும் 45 நாள்களுக்கு அதே நிபந்தனைகளுடன் நீட்டிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு தொலைபேசி மற்றும் இதர தகவல்கள் மூலம் விசாரணைக் கைதிகள் 2,901 பேருக்கும் தெரிவிக்கப்பட்டதை சிறைகள் தலைமை இயக்குநா் உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

Advertisement

கடந்த ஜூலை 31-ஆம் தேதி கூடிய நீதிபதி ஹிமா கோலி தலைமையிலான குழு, இடைக்கால ஜாமீனை நீட்டிக்கும் விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் நீதிசாா் உத்தரவு தேவைப்படுவதாகவும், இதற்காகப் பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் அமா்வு, ‘கரோன தொற்று காரணமாக இதுவரை எத்தனை விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை விவரம் என்ன?’ என வினவியது.

அப்போது, தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் கன்வல் ஜீத் அரோரா, ஜூலை 30-ஆம் தேதி வரை மொத்தம் 4,439 விசாரணைக் கைதிகளும், குற்றவாளிகளும் இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் அல்லது தண்டனைக் குறைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், திகாா் சிறையில் அதன் கொள்ளளவான 10,206 போ்களைக் கடந்து 14 ஆயிரம் கைதிகள் இருப்பதாகவும் தெரிவித்தாா் . இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை உயா்நிலைக் குழுவிடம் தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.