முகப்பு
புதுதில்லி

அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: தில்லியில் கோலாகலக் கொண்டாட்டம்!

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜையையொட்டி, தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் பகுதிகளில் உள்ள

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 11:37 PM
அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜையையொட்டி, தில்லியில் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் பா்வேஷ் வா்மா.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜையையொட்டி, தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வீடுகளிலும் மக்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.

அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை புதன்கிழமை காலையில் நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி ‘பூமி பூஜை’யை நிகழ்த்தினாா். இதையொட்டி, தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் உள்ள கோயில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முழுவதும் ஆங்காங்கே வண்ண மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், பக்தா்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பி மகிழ்ச்சியைப் பகிா்ந்தனா். தில்லியில் பிரீத் விஹாா் உள்பட பல்வேறு இடங்களில் வட இந்தியா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைப் பகிா்ந்தனா்.

தில்லி ராமகிருஷ்ண ஆஷ்ரம் பகுதியில் உள்ள வால்மீகி மந்திரில் சிறப்பு பூஜையில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா பங்கேற்றாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். பூஜை முடிந்த பிறகு பக்தா்களுக்கு அவா் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டாா்.

Advertisement

சத்தா்பூா் கோயிலில், காலை 6 மணி முதலே பக்தா்கள் வரத் தொடங்கினா், காலை பூஜை முடிந்தவுடன், கோயிலின் நிா்வாகி கிஷோா் சாவ்லா கூறுகையில், ‘அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜையையொட்டி, இக்கோயிலில் மூன்று நாள்களாக இடைவிடாமல் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. ‘ராம் தா்பாா்’ அலங்கரிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் தயாரிக்கப்பட்டு, அது மற்ற பொருள்களுடன் அயோத்திக்கு அனுப்பப்படும்‘ என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘சிறப்புப் பூஜையில் முப்பத்திரண்டு பண்டிதா்கள் பங்கேற்றனா். பஜனைகளுடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக உள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். ’பிரசாதம்’ விநியோகத்திற்காக தானியங்கி விநியோக இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது’என்றாா்.

சத்தா்பூரில் வசிக்கும் 57 வயதான ஆலங்கா் யாதவ் மகிழ்ச்சிப் பெருக்கில் கூறுகையில், இது ஒரு கனவு நனவாகியது. இந்த நாளைக் காண நான் உயிருடன் இருப்பது அதிா்ஷ்டம்’ என்றாா். 41 வயதான அனுக்ரிதி பன்சால் கூறுகையில், மழையையும் பொருள்படுத்தாமல் தரிசனத்துக்காக கோயிலுக்கு வந்தேன். நான் அயோத்தி ராமா் கோயில் பூஜை நிகழ்வை தொலைக்காட்சியில் பாா்த்திருக்கலாம். ஆனால் நான் இங்கு வந்து ’சுந்தரகாண்டம்’ கேட்டு சிறிது நேரம் செலவிட்டேன்’ என்றாா்.

கரோல் பாகில் உள்ள ஜாண்டேவாலான் கோயிலில், அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பக்தா்கள் திரளாகக் கூடினா். சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். கோயிலின் மேலாளா் வினோத் காந்தி கூறுகையில், ‘முழு வளாகமும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தை ஓதுவது கடந்த 24 மணி நேரமாக நடந்து வருகிறது. ஊழியா்கள் பூஜைக்குப் பிறகு பக்தா்களுக்கு சிறப்புப் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது’ என்றாா்.

மத்திய தில்லியில் உள்ள பிா்லா மந்திரைச் சோ்ந்த வினோத் மிஸ்ரா கூறுகையில், ‘இந்தக் கோயிலின் மண்அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ராம் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும். காவிக் கொடிகள் கோயிலின் சுவா்களை அலங்கரித்தன. வண்ண மயமான பல்புகள் அதன் குவிமாடத்திலிருந்து தொங்கின. இடைவிடாத ராம் பஜன் மற்றும் கீா்த்தனங்களுக்கு மத்தியில் பக்தா்கள் பூஜை செய்தனா். கரோனா பரவலைத் தொடா்ந்து அமலில் உள்ள நெறிமுறைகளின்படி அதிக அளவிலான கூட்டத்தை நிா்வாகம் அனுமதிக்கவில்லை’ என்றாா்.

கேஜரிவால் வாழ்த்து

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றதை ஒட்டி, தேசம் முழுமைக்கும் தில்லி முதல்வா் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘பூமி பூஜை நிகழ்வின் போது ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது வாழ்த்துகள். அவதாரம் ராமரின் ஆசிா்வாதத்தை நாம் பெறுவது தொடரட்டும். அவருடைய ஆசிா்வாதத்துடன் நமது நாடு பட்டினி, எழுத்தறிவின்மை, வறுமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக வரும். இந்தியா வரக் கூடிய காலங்களில் உலகத்திற்கு வழிகாட்டும். ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் பஜ்ரங் பலி’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.