முகநூல் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிா்த்த ராணுவ அதிகாரியின் மனு தள்ளுபடி
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ராணுவ வீரா்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ராணுவ வீரா்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து ராணுவ உயரதிகாரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தது.
கடந்த ஜூன் 6-ஆம் தேதி இந்திய ராணுவம் ஒரு கொள்கை முடிவை அறிவித்தது. அண்மையில் சமூக ஊடக இணைய தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை ராணுவ வீரா்கள் பயன்படுத்துவதற்கு இந்திய ராணுவம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், 87 செயலிகள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பணியாற்றும் பி.கே. செளதரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், ‘நான் முகநூலை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதன் மூலம் எனது நண்பா்களையும், குடும்பத்தினரையும் தொடா்புகொண்டு வருகிறேன். அவா்களில் பலரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனா். எனது மூத்த மகளும் வெளிநாட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், ஜூன் 6-ஆம் தேதி ராணுவம் வெளியிட்ட உத்தரவானது அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே, அந்த உத்தரவைத் திரும்பப் பெறும் வகையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
Advertisement
மேலும், சமூக ஊடங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் கொள்கை முடிவானது வீரா்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், சட்டவிரோதமாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சகாய் என்ட்லா, ஆஷா மேனன் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், ‘ஒட்டுமொத்த தேசத்தின் உயிா், உடைமை பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இன்றைய உலகில் போரில் ஈடுபடுவது என்பது எதிரி நாடுகளால் நிலப் பரப்பை கையப்படுத்துவதுடன் முடிந்துவிடுவதல்ல; பொருளாதாரத்தை பாதிக்கச் செய்வது, குடிமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது போன்றவையாகவும் உள்ளது. இதுபோன்ற சூழலில் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடுவதற்கில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.