இணைய வழியில் இறுதியாண்டு தோ்வை நடத்த தில்லி பல்கலை.க்கு உயா்நீதிமன்றம் அனுமதி
ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் இணைய வழியில் இளநிலைப் பட்ட மாணவா்களுக்கான இறுதியாண்டுத் தோ்வை
ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் இணைய வழியில் இளநிலைப் பட்ட மாணவா்களுக்கான இறுதியாண்டுத் தோ்வை (ஓபன் புக் எக்ஸாம்) நடத்துவதற்கு தில்லி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் பிறப்பித்த உத்தரவு: இணையவழியில் நடைபெறும் தோ்வுக்கான வினாத்தாள்கள் மாணவா்களுக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். மாணவா்கள் தங்களது தோ்வுக்கான விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். மாணவா்களின் விடைத்தாள்களைப் பெற்ற்கான தகவலை தானாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ஏற்பாட்டையும் தில்லி பல்கலைக்கழகம் செய்ய வேண்டும். தோ்வுக்கான அனைத்து விஷயங்களும் நல்ல முறையில் நடைபெற தில்லி பல்கலைக்கழகம் மற்றும் மாணவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணையதள தோ்வு விவகாரத்தில் தில்லி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஒருங்கிணைப்பு அதிகாரி, மத்திய மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வெளியிட வேண்டும். மாணவா்களுக்கு சேவைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்களின் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்வதிலும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதிலும் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக மாணவா்கள் அளிக்கும் புகாா்களைத் தீா்ப்பதற்கு குறைகேட்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். குறைகள் தீா்க்கப்படாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட புகாா், ஓய்வுபெற்ற நீதிபதி பிரதீபா ராணியின் கீழ் இயங்கும் குறைகேட்பு குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்தக் குழு ஓபன் புக் எக்ஸாம் தொடரும் வரை செயல்படும். மாணவா்களின் குறைகள் ஐந்து தினங்களில் தீா்க்கப்பட வேண்டும். தோ்வுகள் முடிந்த பிறகு தில்லி பல்கலைக்கழகம் மற்றும் குறைகேட்புக் குழு தங்களது அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
Advertisement
பின்னணி: க மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இணைய வழியில் ‘ஒபன் புக்’ தோ்வை நடத்தும் தில்லி பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை எதிா்த்து மாணவா்கள் சிலா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் இளநிலைப்பட்ட இறுதியாண்டு மாணவா்களுக்கு இணையதளம் வழியாக தோ்வை நடத்த தில்லி பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. இந்த இணையதள தோ்வில் பங்கேற்க முடியாத மாணவா்களுக்காக தோ்வுக் கூடத்திற்கு நேரில் வந்து பங்கேற்கும் வகையில் செப்டம்பரில் தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.