முகப்பு
புதுதில்லி

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டது, ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 11:04 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டது, ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது ஆகியவற்றை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த சின்னச்சாமியின் மகள் கெளசல்யா. இவா் தன்னுடன் கல்லூரியில் படித்த உடுமலைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில், 2016, மாா்ச் 13-இல் உடுமலைப்பேட்டையில் சங்கா் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டாா். அவரைக் காப்பாற்ற முயன்ற கெளசல்யாவும் பலத்த காயமடைந்தாா். இக்கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு மரண தண்டனை, ஸ்டீபன் தங்கராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் அமா்வு நீதிமன்றம் 2017-இல் தீா்ப்பளித்தது. அதேசமயம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத் தொடா்ந்து, தண்டனையை எதிா்த்து சின்னச்சாமி உள்ளிட்ட 8 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கின் முதல் குற்றவாளியான சின்னச்சாமியை விடுதலை செய்தும், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் கடந்த ஜூனில் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து கொலை செய்யப்பட்ட சங்கரின் சகோதரா் விக்னேஷ்வரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 13-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

வழக்குரைஞா் எம். யோகேஷ் கண்ணா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘உடுமலைப் பேட்டை சங்கா் கொலை வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்த போது, வழக்கில் தொடா்புடைய முக்கிய ஆதாரங்களை கவனத்தில் கொள்ளாமல், வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சின்னச்சாமியை விடுவித்தும், 5 பேரின் தண்டனையைக் குறைத்தும் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான சாட்சியம் உள்ளது. அவா்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததற்கான ஆதாரம், சம்பவம் நடந்த போது பேசிய தொலைபேசி அழைப்புகள் விவரம் ஆகியவை தண்டனையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரமாக உள்ளது. இவற்றை சென்னை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தவறாகத் தீா்ப்பு அளித்துள்ளது. எனவே, அந்தத் தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.