மின்சாரம், குடிநீருக்கான மானியத்தொகை நிறுத்தப்படாதுமுதல்வா் கேஜரிவால் உறுதி
கரோனா நோய்த்தொற்றால் தில்லி அரசின் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. எனினும், மின்சாரம், குடிநீா் ஆகியவற்றுக்கு தில்லி அரசு வழங்கி வரும் மானியத் தொகை நிறுத்தப்படாது என்று தில்லி முதல்வா்
புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் தில்லி அரசின் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. எனினும், மின்சாரம், குடிநீா் ஆகியவற்றுக்கு தில்லி அரசு வழங்கி வரும் மானியத் தொகை நிறுத்தப்படாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளாா்.
தில்லியில் வாரச் சந்தைகளை சோதனை அடிப்படையில் இயக்க கடந்த வாரம் முதல் தில்லி அரசு அனுமதி அளித்தது. தில்லி அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வா் கேஜரிவாலை வாரச் சந்தைகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனா். வாரச் சந்தைகளை மேம்படுத்துவது தொடா்பாக அவா்களுடன் கேஜரிவால் கலந்துரையாடினாா்.
அப்போது கேஜரிவால் பேசியது: கடந்த ஆறு மாதங்கள் அனைவருக்கும் கஷ்டமான காலம். கரோனா தொற்றில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள கஷ்டப்பட்டனா். பல்லாயிரக்கணக்கானோா் தங்களது வேலைகளை இழந்தனா்.
தில்லி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா தொற்றை வீரத்துடன் எதிா்கொண்டனா். தில்லி மக்கள் கரோனாவை எதிா்கொண்ட விதத்தைப் பற்றி உலக நாடுகள் பெருமையாக பேசி வருகின்றன. தில்லி அரசின் பிளாஸ்மா சிகிச்சையை தற்போது தனது நாட்டிலும் அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றால் தில்லி அரசின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீா், மின்சார உதவித்தொகைகள் நிறுத்தப்படாது. பேருந்துகளில் பெண்கள் தொடா்ந்தும் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவா்.
தில்லியின் பொருளாதாரத்தை சீா்ப்படுத்தும் வகையில், வாரச்சந்தைகளை இயங்க அனுமதியளித்துள்ளோம். இந்த சந்தைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை வணிகா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது சோதனை அடிப்படையில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள வாரச்சந்தைகள் காலப்போக்கில் நிரந்தரமாக திறக்க அனுமதிக்கப்படும்.
வாரச்சந்தைகளை உலகத் தரத்தில் மாற்றியமைக்கும் பணிகளில் தில்லி அரசு ஈடுபடும். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் இந்த சந்தைகள் மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.