முகப்பு
புதுச்சேரி

கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன்

புதுவை காங்கிரஸை திருமாவளவன் விமர்சித்திருப்பது பற்றி...

Updated On : 26 மார்ச் 2026, 11:22 am IST
தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறை கூட்டணியின் வெற்றியைக் கேள்விக்குறியாக்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் 16 தொகுதியிலும், திமுக 14 தொகுதியிலும் போட்டியிட ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதில், உழவர்கரை தொகுதியை விசிகவுக்கு திமுக உள்ஒதுக்கீடு செய்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள சில காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் திரும்பப் பெற மறுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சியை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து 'உழவர்கரை தொகுதியை' திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அந்தத் தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுவை காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை அறிவிக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்துவரும் பாஜக கூட்டணியை வீழ்த்தி மீண்டும் சமூக நல்லிணக்கமும், வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட ஆட்சியைப் புதுச்சேரியில் அமைத்திட மதச்சார்பற்ற உணர்வுகொண்ட புதுச்சேரி மக்கள் விசிக வேட்பாளர்களுக்குப் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேட்பாளர் பட்டியல்: ஊசுடு - பெ. அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கம் - ப. அமுதவன், உழவர்கரை - செல்வ. புஷ்பலதா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டியிடும் என்று ஏற்கெனவே திருமாவளவன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Congress's approach calls into question the alliance's success! Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments