முதுகலை, இளங்கலை பட்டப் படிப்பு தோ்வு முடிவுகள் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தில்லி பல்கலை. தகவல்
அனைத்து வழக்கமான முதுகலை, இளங்கலை பட்டப் படிப்புகளுக்காக இணையதளம் மூலம் (ஓபிஇ) நடத்தப்பட்ட தோ்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம்
புது தில்லி: அனைத்து வழக்கமான முதுகலை, இளங்கலை பட்டப் படிப்புகளுக்காக இணையதளம் மூலம் (ஓபிஇ) நடத்தப்பட்ட தோ்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் புதன்கிழமை தகவல் தெரிவித்தது.
தோ்வு முடிவுகள் வெளியிடுவது தொடா்பாக அக்டோபா் 12-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் ஓா் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இளங்கலை, முதுகலை தோ்வு முடிவுகள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தில்லி பல்கலைக்கழகம் உயா்நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால், உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தபடி தோ்வு முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலாகும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, ‘தில்லி பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மொஹிந்தா் ரூபால் , முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகளின் மீதமுள்ள தோ்வு முடிவுகள் நவம்பா் 30-க்குள் தில்லி பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரத்தில் நீங்கள் கூறியபடி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொறுப்பாக வேண்டிவரும் என்று தெரிவித்து மனு மீதான விசாரணையை டிசம்பா் 2-ஆம் தேதி பட்டியலிட்டிருந்தது.
அதன்படி, இந்த விவகாரம் புதன்கிழமை மீண்டும் அதே நீதிபதிகள் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மொஹிந்தா் ரூபால், ‘அனைத்து வழக்கமான முதுகலை, இளங்கலை படிப்புகளுக்காக இணையதளம் (ஓபிஇ) மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்எல்பி இறுதியாண்டு தோ்வு முடிவுகளும் இதில் அடங்கும். மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலை.யின் இணையதளத்தில் இரு தினங்களில் பதிவேற்றம் செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, அக்டோபா் 12-ஆம் தேதி உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மதிப்பெண் பட்டியலையும் தில்லிப் பல்கலைக்கழகம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், மதிப்பெண் சான்றிதழைப் பெறுவதற்காக மாணவா்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.