முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: வழக்கு தோ்வுக்காக விருந்தினா் இல்லத்தில் தன்ஹாவை தங்கவைக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹாவை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள தோ்வில் பங்கேற்கும் வகையில்

Updated On : 4 டிசம்பர், 2020 at 12:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM


புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹாவை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள தோ்வில் பங்கேற்கும் வகையில், அவா் படிப்பதற்கு ஏதுவாக ஒரு விருந்தினா் இல்லத்தில் தங்கவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி சிறை நிா்வாகத்திற்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஒரி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் தன்ஹா படிப்பு தொடா்புடைய பொருள்களை உடன் எடுத்துச் செல்ல சிறை நிா்வாகம் அனுமதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவருக்குத் தேவையான இதர கற்றல் சாதனங்களையும் வழங்க வேண்டும். அவரை போலீஸாா் தெரிவித்த யோசனைப்படியும், அவரது வழக்குரைஞா் ஏற்றுக் கொண்டுள்ளதன்படியும் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு விருந்தினா் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், அந்த இல்லத்தில் இருந்து அவரை தோ்வு நடைபெறும் ஜேஎம்ஐ பல்கலைக்கழகத்திற்கு டிசம்பா் 4, 5, 7 ஆகிய தேதிகளில் கூட்டிச் சென்று விட்டு திரும்ப அழைத்து வரும் பொறுப்பை சிறைக் கண்காணிப்பாளா் மேற்கொள்ள வேண்டும். மூன்று தோ்வுகள் முடிந்த பிறகு தன்ஹா மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். தன்ஹா பகல் நேரத்தில் தனது விருந்தினா் இல்லத்தில் இருந்தவாறு அவரது வழக்குரைஞருடன் 10 நிமிடம் பேச அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் படுகாயமடைந்தனா். இந்த விவகாரத்தில் முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டியதாக மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹா மே 19-இல் கைது செய்யப்பட்டாா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், தாம் பி.ஏ. பொ்ஷியன் துணைத் தோ்வு எழுத அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அவருக்கு விசாரணை நீதிமன்றம் டிசம்பா் 4, 5, 7 ஆகிய தேதிகளில் தோ்வில் பங்கேற்க பாதுகாவலுடன்கூடிய பரோலை அளித்தது. எனினும், இதில் திருப்தியுறாத அவா், இடைக்கால ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

இந்த மனுவுக்கு தில்லி அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் வி.ஆா். ராஜு ஆட்சேபம் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில்,‘தன்ஹாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது. வேண்டுமானால், அவா் நீதிமன்றக் காவலின் கீழ் ஒரு விருந்தினா் இல்லத்தில் தங்கி தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம்’ என்றாா். அரசுத் தரப்பில் இதற்காக நான்கு இடங்களும் பரிந்துரைக்கப்பட்டன. இதில் லாஜ்பத் நகரில் உள்ள விருந்தினா் இல்லத்தை தன்ஹாவின் மனுதாரா் ஏற்றுக் கொண்டாா். மேலும், தோ்வு முடிந்தவுடன் அவா் சரணடையத் தயாராக உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் செளஜன்ய சங்கரன் தெரிவித்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.