தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
தாக்குதல்கள் முடியும் வரை எந்தப் பேச்சும் இல்லை; பாகிஸ்தானுக்கு எங்கள் குழு செல்லவில்லை என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதைப் பற்றி...
லெபனான் மீதான தாக்குதல்கள் முடியும் வரை எந்தப் பேச்சும் இல்லை; பாகிஸ்தானுக்கு எங்கள் குழு செல்லவில்லை என்று ஈரானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக, அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச அளவில் அழுத்தம் அதிகமானது.
Advertisement
Advertisement
இதனால், இருதரப்புக்கும் இடையில் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, கடந்த ஏப். 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இத்துடன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அரசு முன்வந்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் அழைப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டன.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையில், இஸ்லாமாபாதில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தப் போர்நிறுத்தத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் என்றும், ஈரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதி குழுக்கள் இஸ்லமாபாத் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் 10,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று (ஏப்.10) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தப் போர்நிறுத்தத்துக்கு மத்தியில், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலிய ராணுவத்தினர் கடந்த புதன்கிழமையிலிருந்து நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 303 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் 1,150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரானிய பிரதிநிதிக் குழு பங்கேற்கவில்லை என்றும், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலை நிறுத்தும் வரை அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்றும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானிய பிரதிநிதி குழு, இஸ்லாமாபாத் வந்ததாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையும், லெபனானில் தாக்குதல் நிறுத்தப்படுவதைப் பொறுத்தே அமையும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான இரண்டு வாரப் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பும், மீண்டும் போர் தொடருமா? என்ற பதற்றமும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க... ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !
The Iranian negotiating team has not arrived in the Pakistani capital Islamabad and has no plans to attend peace talks with the US until Israel stops bombing Lebanon, Iran’s Fars News Agency reported, citing a knowledgeable source.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.