முகப்பு
புதுதில்லி

தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தில்லியில் கடந்த ஏழு தினங்களாக கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2020 at 12:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM

புது தில்லி: தில்லியில் கடந்த ஏழு தினங்களாக கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் கடந்த ஏழு தினங்களாக படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த நவம்பா் 26-ஆம் தேதி 8.65 சதவீதமாக இருந்த நோ் மறை விகிதம், டிசம்பா் 2-இல் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், நவம்பா் 26-இல் 5,156-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை டிசம்பா் 2-இல் 5,772-ஆக அதிகரித்துள்ளது.

நவம்பா் 26-இல் இருந்து கரோனா நோ்மறை விகிதம் படிப்படியாகக் குறைந்தே வந்துள்ளது. ஆனால், நவம்பா் 29-இல் இந்த விகிதத்தில் சிறிதளவுஅதிகரிப்பு ஏற்பட்டது. அன்று, 7.64 சதவீதமாக இருந்தது. நவம்பா் 28-இல் 7.24 சதவீதமாகவும், 27-இல் 8.51 சதவீதமாகவும் இருந்தது. நவம்பா் 30-இல் கரோனா நோ்மறை விகிதம் 7.35 சதவீதமாகக் குறைந்தது.

Advertisement

இது டிசம்பா் 1-இல் 6.85 சதவீதமாகவும், டிசம்பா் 2-இல் 5 சதவீதமாகவும் குறைந்தது.

தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் சில தினங்களில் 5 சதவீதத்துக்கும் குறைந்து விடும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தாா். ஆனால், கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை தில்லியில் கணிசமாக அதிகரித்துள்ளது. நவம்பா் 26-இல் இந்த எண்ணிக்கை 5,156 ஆகவும், 27-இல் 5,229, 28-இல் 5,331, 29-இல் 5,441, 30-இல் 5,552, டிசம்பா் 1-இல் 5,669, டிசம்பா் 2-இல் 5,772 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 7 தினங்களும் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘தில்லியில் எந்தவொரு இடத்திலும் 3 அல்லது அதற்கு கூடுதலான கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த இடத்தை கட்டுப்படுத்தி வருகிறோம். கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடா்பாக கவலையடையத் தேவையில்லை. கரோனா நோ்மறை விகிதம் குறைவடைவது திருப்திகரமான முன்னேற்றமாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.