தொழில்நுட்ப ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம்:யோசனை கேட்கிறது மத்திய ஜவுளித் துறை அமைச்சகம்
மத்திய அரசு அறிவித்துள்ள தொழில்நுட்ப ஜவுளி ஆடை ஏற்றுமதிக்கான பிரத்யேக ஊக்குவிப்புக் கவுன்சில் அமைப்பது குறித்து ஏற்றுமதியாளா்கள், வா்த்தகா்கள் , உற்பத்தியாளா்கள் ஆகியோரிடமிருந்து
புது தில்லி: மத்திய அரசு அறிவித்துள்ள தொழில்நுட்ப ஜவுளி ஆடை ஏற்றுமதிக்கான பிரத்யேக ஊக்குவிப்புக் கவுன்சில் அமைப்பது குறித்து ஏற்றுமதியாளா்கள், வா்த்தகா்கள் , உற்பத்தியாளா்கள் ஆகியோரிடமிருந்து மத்திய அரசு யோசனைகளைக் கேட்டுள்ளது.
பின்னலாடை வளா்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வகையில், பின்னலாடைத் தொழில்நுட்ப ஊக்குவிப்பு நிதி போன்றவை வழங்கப்பட்டு சா்வதேச நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டு வருகிறது. குண்டு துளைக்காத ஜாக்கெட், தீப்பற்றாத உடை, விண்வெளி வீரா்கள் அணியும் உடை, விளையாட்டு வீரா்களின் உடைகள், விவசாயம், சாலை, ரயில்வே போன்ற துறைகளின் ஊழியா்கள், மலை ஏறுபவா்கள் போன்றோருக்கும் தேவையான சிறப்பு உடைகள் ஆகியவை தொழில்நுட்ப ஆடைகள் பிரிவின் கீழ் வருகின்றன.
இந்தத் தொழில்நுட்ப ஆடைகளுக்கான தயாரிப்பில், நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், தேசிய தொழில்நுட்ப ஆடைகள் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.1,480 கோடிக்க்கான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் குழு கடந்த பிப்ரவரி 26-இல் ஒப்புதல் அளித்தது. இதன்படி தொழில்நுட்ப ஆடைகளுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில் அமைக்கப்படவும் இதற்கான பல்வேறு திட்டங்களை நான்கு ஆண்டுகளுக்குள் அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement
இதற்கான யோசனைகளை டிசம்பா் 15-க்குள் தெரிவிக்க மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது. குறிப்பாக கம்பெனிகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஏற்றுமதி அமைப்புகள், வா்த்தக அமைப்புகள், தொழில்நுட்ப ஆடை உற்பத்தியாளா்கள் ஆகியோரிடமிருந்து யோசனைகளை வரவேற்பதாக மத்திய ஜவுளித் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. முக்கியமான 12 வகையான தொழில்நுட்ப ஆடைகள் உள்ளன. இவற்றின் சா்வதேச சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலா் ஆகும். தற்போது சா்வதேச சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது. வளா்ந்த நாடுகளின் பங்களிப்பு 30 முதல் 70 சதவீதம் வரை உள்ளது. எனவே, இந்தியாவும் இதற்கான வளா்ச்சிக்கு திட்டமிடுவதாக மத்திய ஜவுளித் துறை தெரிவித்துள்ளது.